பெரும் சோகம்! வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
6 members of the same family were killed in an oxygen cylinder explosion in UP
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த் சாஹர் மாவட்டத்தின் சிக்கந்தராபாத் பகுதியில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்தது. இந்த கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், உட்பட 9 மாத கர்ப்பிணி மற்றும் அவரது 3 வயது குழந்தை உட்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்தது ஆஷாபுரி காலனியில் வசித்து வந்த முகமது ரியாசுதீன் (50) என்பவரது வீட்டில். அவரது மனைவி ருக்சானா (45) உடல்நலக்குறைவால், ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில், வீட்டின் இரு மாடி கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இச்சம்பவத்தில் ரியாசுதீன், ருக்சானா, அவர்களின் மகன்கள் ஆஸ் முகமது (26), சல்மான் (16), மகள் தமன்னா மற்றும் அவரது 3 வயது மகள் ஹிப்ஸா ஆகியோர் உடல் சிதைந்து உயிரிழந்தனர்.
தமன்னா, 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த விபத்துக்கு பின், அவரது கணவர் முகமது ரிஸ்வான், "இந்த துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது," என்று வேதனையுடன் தெரிவித்தார். அதே நேரத்தில், ரியாசுதீனின் மற்ற இரண்டு மகன்கள் ஷாருக் (26), சிராஜ் (30) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்தபோது, அதிர்வுகள் 500 மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்புப்படையினர் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
English Summary
6 members of the same family were killed in an oxygen cylinder explosion in UP