மீண்டும் இந்தியாவில் தடம் பாதிக்கும் சீட்டா ரக சிறுத்தைகள் - எதிர்பார்ப்போடு காத்திருக்கும் பூங்கா..!
cheetah leopard come to india
நமீபியாவில் இருந்து சார்ட்டர் சரக்கு விமானம் மூலம் எட்டு சிறுத்தைகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது.
கடந்த 1952-ம் ஆண்டு இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு முதல் கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின்படி எட்டு "சீட்டா" ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது.
அந்த சிறுத்தைகளில், 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானத்தின் மூலம், நமீபியாவில் இருந்து நாளை காலையில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டரின் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. நம்பீயாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் சிறுத்தைகளை பிரதமர் மோடி நாளை தனது பிறந்தநாளன்று பூங்காவில் விடுகிறார்.
இந்நிலையில், நம்பீயாவில் இருந்து புறப்படும் இந்த சிறுத்தைகளுக்கு விமானத்தில் உணவு வழங்கப்படாது. பிறகு, இந்த சிறுத்தைகளுக்கு குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் தான் உணவு வழங்கப்படும். நீண்ட நேர பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை உருவாக்கி பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை, என்று வனத்துறை அதிகாரி சவுகான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீட்டா திட்டத்தின் தலைவர் எஸ்பி யாதவ் தெரிவிக்கையில்:- "சார்ட்டர் சரக்கு விமானம் சிறுத்தைகளை கொண்டுவர தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்கு உள்ளிட்ட காரணங்களுக்காக வழியில் எங்கும் தரையிறக்கப்படவோ நிறுத்தப்படவோ வேண்டியதில்லை, நேரடியாக இந்தியாவை அடைந்துவிடும்.
செயற்கைக்கோள் ரேடியோ காலர்கள் ஒவ்வொரு சிறுத்தையின் கழுத்திலும் மாட்டப்பட்டு அவற்றின் புவிஇருப்பிடம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு சிறுத்தைக்கும் ஒரு பிரத்யேக கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cheetah leopard come to india