கேரளாவில் துாக்கு தண்டனை கைதிகள் 35 ஆக அதிகரிப்பு..!
Death row inmates in Kerala increase to 35
கேரள சிறையில் இருக்கும் துாக்கு தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில், வெவ்வேறு வழக்குகளில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட 34 பேர், ஏற்கனவே சிறைகளில் உள்ளனர். காதலனை கொலை செய்ததற்காக துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட கிரீஷ்மா உடன் சேர்த்து 35 ஆக அதிகரித்துள்ளது.
கண்ணனுார் சிறையில் 1991-இல் ரிப்பர் சந்திரன் என்பவர் கடைசியாக துாக்கில் போடப்பட்டார். அப்போது, துாக்கில் போடுவதற்கு தனியாக பணியாளர் எவரும் இல்லை. சிறை கண்காணிப்பாளர் கருணாகரன் என்பவர் தான் துாக்கு தண்டனையை நிறைவேற்றினார்.
இந்த ரிப்பர் சந்திரன், 14 பேரை கொடூரமாக கொலை செய்த நபர் என்பதால், அவரது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் துாக்கில் இடப்பட்டார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பூஜப்புரா மத்திய சிறையில் 23 கைதிகளும், கண்ணனுார், விய்யூர் சிறைகளில் தலா 04 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
விய்யூர் உயர் பாதுகாப்பு துறை, திருவனந்தபுரம் பெண்கள் சிறையில் தலா இருவர் துாக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரத்தன் பாய் ஜெயின் என்ற பெண்மணி தனியார் மருத்துவமனையில் மேலாளராக இருந்தவர். தனது கணவருடன் 03 பெண்கள் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து அவர்களை கொலை செய்தவர். இவருக்கு டில்லி செசன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதனை பஞ்சாப் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
அதன்பிறகு 1955ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03ம் தேதி ரத்தன் பாய் ஜெயினுக்கு டில்லி சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு எந்த பெண்ணுக்கும் இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Death row inmates in Kerala increase to 35