மதம் மாறி 2வது திருமணம்; துணை தாசில்தார் பதவி பறிப்பு.!
deputy dhasildar dismiss for change religion and marriage in uttar pradesh
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள, ஹமீர்பூர் மாவட்டம் மவுதாஹா நகரில் துணை தாசில்தாராக பணியாற்றியவர் ஆஷிஷ் குப்தா. இவர் சமீபத்தில் தன் பெயரை முஹமது யூசப் என்று மாற்றியதுடன், உள்ளூர் தர்காவில் தொழுகையும் மேற்கொண்டார்.
இதனால், சந்தேகமடைந்த மசூதியின் பொறுப்பாளர் முஹமது முஸ்தாக், துணை தாசில்தார் மீது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதேபோல், தாசில்தாரின் மனைவி ஆர்த்தியும் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'என் கணவர் ஆஷிஷ் குப்தாவை, முஸ்லிம் மதத்திற்கு சிலர் கட்டாயப்படுத்தி மாற்றி உள்ளதுடன், அம்மதத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணமும் செய்து வைத்துள்ளனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், மாநில அரசின் நன்னடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அவர் செயல்பட்டுள்ளதால், பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதுகுறித்து ஹமீர்பூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் டாக்டர் அருண் மிஸ்ரா தெரிவித்ததாவது-
''துணை தாசில்தாராக பதவி வகித்த ஆஷிஷ் குப்தா, விதிகளை மீறி செயல்பட்டதால், அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது நடத்தை விபரங்களையும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றுத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஆஷிஷ் குப்தாவின் மனைவி ஆர்த்தி அளித்த புகார் அடிப்படையில் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக, மூன்று பேரை போலீசார் கைது செய்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
deputy dhasildar dismiss for change religion and marriage in uttar pradesh