கலெக்டரையே திணறவைத்த நிதியமைச்சர்..!
finance minister choked collector
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களவை சுற்றுப்பயண திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜகீராபாத் மக்களவை தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அவர் தொகுதியில் அடங்கிய, காமாரெட்டி மாவட்டம் பிர்குர் என்ற இடத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு அவர் சென்றபோது, அந்த கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததை கண்டு கடுங் கோபமடைந்த அவர், தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் பட்டீலிடம் பல்வேறு கேள்விகளை விடுத்தார்.
அப்போது அவர் கலெக்டரிடம் தெரிவித்ததாவது:- வெளிச்சந்தையில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அரிசி, இங்கு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் போக்குவரத்து செலவு, சேமித்து வைக்கும் செலவு உள்ளிட்ட செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. 35 ரூபாய் மதிப்புள்ள அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? மாநில அரசின் பங்கு எவ்வளவு என்று தெரியுமா? என்று நிதியமைச்சர் கேட்டதற்கு கலெக்டர் பதில் தெரியாமல் அமைதியாக இருந்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்த கேள்விக்கு நன்றாக சிந்தித்து, 30 நிமிடத்துக்குள் பதில் சொல்லுங்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதற்கு முன்பு வாருங்கள். அப்போதுதான், ''எனது கேள்விக்கு கலெக்டரால் கூட உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை, போராடித்தான் தகவல் திரட்டினார்'' என்று நான் பத்திரிகையாளர்களிடம் சொல்ல முடியும்.
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு பயனாளிக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக அளித்து வந்தது. இப்போது, 35 ரூபாய் அரிசியில் சுமார் 30 ரூபாயை மத்திய அரசும், 4 ரூபாயை மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. அப்படி இருக்கும் நிலையில், ரேஷன் கடையில் பிரதமர் மோடி புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை? பாரதிய ஜனதா தொண்டர்கள், பிரதமர் படத்தை வைக்க வந்தபோது, அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நான் இப்போது சொல்கிறேன். எங்கள் ஆட்கள் வந்து பிரதமரின் பேனரை வைப்பார்கள்.
மாவட்ட நிர்வாகி (கலெக்டர்) என்ற முறையில், அது அகற்றப்படாமலும், கிழிக்கப்படாமலும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு பேனர் இல்லாவிட்டால், நான் மீண்டும் வருவேன் என்று கலெக்டரிடம் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தெரிவித்ததாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று அழைக்கப்படும் 100 நாள் வேலை திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில், 20 சதவீத தொகை, 2020-2021 நிதி ஆண்டில் கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்தில் தெலுங்கானாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
English Summary
finance minister choked collector