தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
Following Tamil Nadu Puducherry is also on strike for electric board works
மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கண்டித்து போராட்டம்!
பாஜக தலைமையிலான மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாகும் முடிவை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மின்துறை ஊழியர்களை முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டதனால் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மின்துறையை தனியார் மயமாக மாற்றுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மின்துறை ஊழியர்கள் டெண்டர் வெளியிட்டதை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
இது குறித்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழு செயலாளர் வேல்முருகன் "புதுச்சேரி மின்துறை தனியார் மயத்திற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இன்று காலை 9 மணிக்கு தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
தமிழக மின்வாரிய தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்பொழுது புதுச்சேரி மின்துறை தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு மாநிலங்களிலும் மின் துறையின் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
English Summary
Following Tamil Nadu Puducherry is also on strike for electric board works