உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் - முதல்வரின் அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நன்றி .!
education minister anbil magesh thanks to cm stalin for cost of higher education
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என்றும் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் "அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.
அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
education minister anbil magesh thanks to cm stalin for cost of higher education