உணவுகளை வெளுத்துக்கட்டிய சிறுத்தைப்புலிகள்..புதிய இடத்தில் உல்லாச ஓட்டம்..!
food provided to cheetah leapord
70 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் முழுவதுமாக அழிந்துபோன சிவிங்கி என்ற சிறுத்தைப்புலி இனத்துக்கு உயிரூட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன் காரணமாக, ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் என 8 சிறுத்தைப்புலிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.
அந்த சிறுத்தைப்புலிகளை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குணோ தேசியப்பூங்காவில் கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவிட்டார்.அந்த பூங்காவில், சிறுத்தைகள் சுதந்திரமாக உலாவருவதற்கு முன்பாக ஒரு மாத காலத்திற்கு அதனை தனியாக ஒரு வலைப்பகுதிக்குள் வைத்து கவனிக்கப்படுகிறது.
இந்த கால அவகாசம் சிறுத்தைகள் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து புதிய இடத்தில் வாழத் தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட விமானப் பயணத்தின் காரணமாக சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு பட்டினியாகவே கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், சிறுத்தைகளுக்கு முதல்முறையாக நேற்று முன்தினம் மாலை பூங்காவில் உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சிறுத்தைப்புலிக்கும் உணவாக தலா 2 கிலோ எருமை மாட்டிறைச்சி கொடுக்கப்பட்டது.
உணவை அந்த சிறுத்தைப்புலிகள் மிக ஆர்வமாக ருசித்தன. புதிய இடத்தில் தயக்கத்துடனே காலடி எடுத்து வைத்த இந்த சிறுத்தைப்புலிகள், மெல்ல மெல்ல இந்த சூழலுக்குப் பழகி வருகின்றன. புதிய வசிப்பிடத்தை மிக ஆர்வத்துடன் கவனித்தபடி உற்சாகமாக சுற்றி வருகின்றன. குறிப்பாக, 'சகோதரிகளான' சவான்னாவும், சாஷாவும் நேற்று மிகவும் விளையாட்டுத்தனமாகவே காணப்பட்டன.
மீதமுள்ள 4 சிறுத்தைப்புலிகளும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தின. பிரெடி, ஆல்டன் என்ற இரு சிறுத்தைகள் அங்கும் இங்கும் ஓடியபடியும், அடிக்கடி தண்ணீர் குடித்தபடியும் இருந்தன. இந்த 8 சிறுத்தைப்புலிகளுக்கும் நமீபியாவில்தான் பெயர் சூட்டப்பட்டது. தற்போதைக்கு அப்பெயர்களை மாற்றும் எண்ணமில்லை என குணோ தேசியப்பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறுத்தைப்புலிக்கு மட்டும் 'ஆஷா' என்று இந்தியப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
English Summary
food provided to cheetah leapord