சுதந்திரத்தின் அருமை உணர்வோம் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறுவோம்.!
Freedom fighter special
இந்திய சுதந்திர தினம்
பட்டிதொட்டி எங்கும் சுதந்திரமாக பறக்கும் நம் தேசியக்கொடி - சொல்லும்போதே சிலிர்க்கிறது அல்லவா? இதோ நெருங்கிவிட்டது சுதந்திர தினம்.
75 ஆண்டுகள் கடந்துவிட்டது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்கள் நம் மனதை நீங்காமல் நிலைகொண்டே விட்டனர். இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்கள் காலத்தால் அழியாத வரலாற்றை போலவே நிலைத்து இருப்பார்கள் என்பதில் அணுஅளவும் ஐயமில்லை.
ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நினைவில் நிற்கும் தினமாக கருதப்படுகிறது. அந்நாள், 'நம் தேசத்தின் விடிவெள்ளி" என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, ஆங்கிலேயரின் கொடியை இறக்கி விட்டு, இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம் நாட்டு சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை மறவாமல் நம் தேசத்தையும், நம் தேசியக்கொடியையும் காப்போம், போற்றுவோம். வரவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை முதல் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவு கூறுவோம்..!!
மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் 'விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.
'நேதாஜி" என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!" என தீர்மானித்து ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.
பாலகங்காதர திலகர் இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் ஒருவர். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர். 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை" என கருதப்படுபவர்.
சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலை தாகம் ஏற்பட செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்.
சுப்பிரமணிய பாரதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.