ககன்யான் மாதிரி சோதனை ஒத்திவைப்பு.!!
Gaganyan trial postponed by ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக ககன்யான் எனும் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ராக்கெட்டில் இருந்து மனிதர்களை பத்திரமாக தரையிறக்கி மீட்கும் மாதிரி சோதனை இன்று காலை நடைபெறுவதாக இருந்தது.
விண்வெளியில் 17 கிலோ மீட்டர் வரை சென்று அங்கிருந்து மனிதர்கள் செல்லும் கலன் மாதிரியை வங்கக் கடலில் இறக்கி மீட்பு பணி மேற்கொள்ளும் சோதனை திட்டம் நடைபெற இருந்தது. இன்று காலை 8 மணி அளவில் இந்த சோதனை ஓட்டமானது நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை சற்று காலதாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மீண்டும் 8:45 மணிக்கு தொடங்கிய நிலையில் கடைசி நேரத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக முழுமையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாதிரி ராக்கெட் விண்ணில் செலுத்த கடைசி 5 நொடிகள் இருந்த நிலையில் இன்ஜின் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் சோதனை ஓட்டம் ஓத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் அறிவித்துள்ளார். இன்ஜின் கோளாறு சரி செய்த பிறகு மற்றொரு நாளில் இந்த சோதனை ஓட்டமானது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Gaganyan trial postponed by ISRO