எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.! 16 பேர் பலி., பலர் கவலைக்கிடம்.!
jharkhand bus accident
ஜார்க்கண்டில் இன்று காலை எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம், பாக்கூர் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்றும் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து நிலைகுலைந்து போனது. இந்த பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர்.
26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்துக்கு இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தது தான் காரணமா? அல்லது பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த சிலிண்டர்கள் எதுவும் நல்வாய்ப்பாக வெடிக்கவில்லை. அப்படி வெடித்திருந்தால் பெரும் அசம்பாவிதம் அரங்கேறி இருக்கும்.