சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு அலர்ட்; டிசம்பர் 30 வரை மழை..? வானிலை மையம் எச்சரிக்கை
Rain alert for 6 districts including Chennai
இன்று இரவு தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்று காலை முதல் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்துகொண்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிபடியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.
இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பாதிப்பால் மக்கள் அவதி அடைந்தனர்.
அத்துடன், வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக்கடலில் கடந்த வார தொடக்கத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது.
இது படிப்படியாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கும் என கூறப்பட்டது. அதேபோல ஞாயிற்றுகிழமை அன்று தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
இது ஆந்திர கடலோர பகுதிகளில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கரையோரம் திங்கட்கிழமை நிலை கொண்டது.
மேலும், இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
English Summary
Rain alert for 6 districts including Chennai