மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இரண்டு வீரர்கள் காயம்.!
near mumbai fire accident in apartment two fire mans injury
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை லோயர் பரேல் பகுதியில் "ஒன் அவிக்னா பார்க்" என்ற அறுபத்து ஒன்று மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள இருபத்திரெண்டாவது மாடியில் பூட்டிக்கிடந்த ஒரு வீட்டில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவ ஆரம்பித்தது.
இதனால், அந்தக் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
முதலில், மற்ற வீடுகளில் சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்டு கீழே அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. மேலும், தீயணைப்பு பணியின் போது தீயணைப்பு வீரர்கள் ராம்தாஸ்சிவ்ராம் சனஸ், மகேஷ் பாட்டீல் உள்ளிட்டோர் தீக்காயமடைந்தனர்.
அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
near mumbai fire accident in apartment two fire mans injury