நாடாளுமன்ற முடக்கம்: சபாநாயகருடன் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!
Parliament deadlock Opposition consultative meeting with Speaker
புதுடெல்லி: அதானி மீதான லஞ்ச வழக்கை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பல்வேறு கட்சிகளின் அவைத்தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் காங்கிரசின் கவுரல் கோகோய், திமுகவின் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், திரிணமூல்காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அபே குஷ்வாகா, தெலுங்கு தேசத்தின் ஸ்ரீகிருஷ்ண தேவராயலு, ஐக்கிய ஜனதா தளத்தின் திலேஷ்வர் காமைத், சிவசேனா (உத்தவ் அணியின்) அர்விந்த சாவந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் விவாதங்களை வழக்கப்படி நடத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் கூறுகையில்,"ஒரு பிரச்சினையை விவாதிக்க விரும்பினால், அதற்கென விதிமுறை உள்ளது. நோட்டீஸ் கொடுத்து விவாதத்தை மேற்கொள்ளலாம். ஆனால், அமளி ஏற்படுத்தி நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவது சரியல்ல" என்று சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
"பல நாட்களாக நாடாளுமன்றம் செயல்படாதது யாருக்கும் நல்லதல்ல. எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மக்களவையில் டிசம்பர் 13 மற்றும் 14, மாநிலங்களவையில் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் முக்கிய விவாதங்கள் நடைபெறும்" என்றார்.
அரசியல் குறித்த முக்கிய விவாதங்களுடன், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முதல் சுமூகமாக நடைபெறும் என அரசு நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
English Summary
Parliament deadlock Opposition consultative meeting with Speaker