தீபாவளி கொண்டாட்டம் - தடையை மீறினால் வழக்கு - எச்சரிக்கும் காவல்துறை..!
police warning firecrackers for deepawali festival
நாளைய தினம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் காலவரையறை வெளியிட்டுள்ளது. அதன் படி நாளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த கால வரையறையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- உச்சநீதிமன்றம் உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.
தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police warning firecrackers for deepawali festival