சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி: திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு..!
Relief assistance to families of devotees who die naturally at SabarimalaTravancore Devasthanams announces
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகர விளக்கு சீசன்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திர்காக செல்வார்கள். அதேப்போல தோறும் நடைபெறும் பூஜையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். அவ்வாறு சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களில், விபத்துகள் காரணமாக மரணம் அடையும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான பிரீமியம் தொகையினை திருவிதாங்கூர் தேவஸ்தானம் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால், சபரிமலைக்கு மலை ஏறும் போது ஏற்படும் மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்களுக்கு எந்த வித நிவாரண உதவிகளும் வழங்கப்படுவது இல்லை.

சபரிமலை புல்மேடு பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்களில் உதவுவதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து பொது நிவாரண நிதியை ஏற்படுத்த கேரள நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தை வசூல் செய்து அதனை பொது நிவாரண நிதி ஏற்படுத்தப்படும் என்றும், விபத்து அல்லாத மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்களால் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இயற்கையாக மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் வரை நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், இந்த பொது நிவாரண நிதிக்கு பொதுமக்களும், ஐயப்ப பக்தர்களும் தாராளமாக நன்கொடை வழங்கலாம் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களும், கட்டாயம் இன்றி ரூ.5 வீதம் நன்கொடை வழங்க அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 02 சீசன்களில் மலை ஏறும் போது மாரடைப்பு உள்பட இயற்கை மரணங்கள் மூலம் 93 ஐய்யப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Relief assistance to families of devotees who die naturally at SabarimalaTravancore Devasthanams announces