#BigBreaking | உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி கேவியட் மனுத்தாக்கல்!
SP Velumani appeal to SC ADMK DMK 2023
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆட்சி மாற்றத்திற்கு பின், ஆளும் திமுக அரசு டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி, எஸ்பி வேலுமணி மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.
இதற்கிடையே, தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்பி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தும், அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், தனது தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
English Summary
SP Velumani appeal to SC ADMK DMK 2023