800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் சேவா புரஸ்கார் விருது!
Station master honoured with Rail Seva Puraskar for saving lives of 800 passengers
800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
2023 ஆண்டு டிசம்பர் 17 அன்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய பணியில் இருந்த ஏ.ஜாபர் அலி, ரயில் பாதை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதைப் பற்றி பொறியியல் அதிகாரியிடம் இருந்து எச்சரிக்கை தகவலை பெற்றார். அப்போது அடுத்த சில நிமிடங்களில் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தது. 800 பயணிகளுடன் வந்த ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக நிறுத்தினார்.
இந்நிலையில், எதற்காக வெகு நேரமாக ரயிலை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என கோபமடைந்த பயணிகள், இருள் சூழ்ந்த ரயில் நிலையத்தில் செய்வதறியாது ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், விடிந்ததும், ரயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்ட பயணிகள் ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டத்தை புரட்டி போட்ட கடும் வெள்ளத்தால் ரயில்வே அதிகாரிகள் உட்பட மீட்பு படையினர் வருவதற்கு காலதாமதம் ஆனது.
இதையடுத்து மீட்பு படையினர், 60 மணி நேரத்திற்குப் பிறகுஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து தண்ணீர் வடியத் தொடங்கிய பிறகுதான் ரயில்வே தண்டவாள மண்மேடுகள் பல மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இந்நிலையில், 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, மதிப்புமிக்க ரயில்வே வாரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், ஏ.ஜாபர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரயில்வேயில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த விருதுகள் வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
English Summary
Station master honoured with Rail Seva Puraskar for saving lives of 800 passengers