சாதிக்க போகும் சந்திராயன் 3! உலகின் 4வது நாடு என்ற சாதனை நமக்குத்தான்!
Successfully launched Chandrayaan 3 India's journey in space research
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில் நீல் வட்டப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
1958 முதல் இதுவரை நிலவுக்கு முழுமையான வெற்றி அல்லது பகுதி வெற்றி கண்ட என மொத்தம் 70 மிஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 41 மிஷன்கள் தோல்வியில் முடிந்தது என்று நாசாவின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
1950, 1960 மற்றும் 1970களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா மட்டுமே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியிருந்தன. 90 மிஷன்களில் 40 வெற்றி கண்டுள்ளன. 1980களில் நிலவு சார்ந்து எந்தவித விண்வெளி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
1990ல் தான் ஜப்பான் நிலவு ஆராய்ச்சியில் இணைந்தது. ஹிட்டன் ஆர்பிட்டர் என்பது அதன் பெயர். இது பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள் ஆகும். இது எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் கிரகப் பணிகளுக்கான தொழில்நுட்பங்களைச் சோதித்து சரிபார்க்க வடிவமைக்கப்பட்டதாகும்.
ஹிட்டன் விண்கலத்தில் இருந்த ஹகோரோமோ செயற்கைக்கோள் நிலவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு 2000ம் ஆண்டு சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து நிலவுக்கான முதல் ஆர்பிட்டல் மிஷன்களை வெற்றிகரமாக மேற்கொண்டன.
இந்தநிலையில் இன்று இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சந்திரயான்-2 அடைந்தது. எனினும், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. ஆனால் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
English Summary
Successfully launched Chandrayaan 3 India's journey in space research