கேரளா வெடி விபத்து - 3 பேர் கைது.!
three peoples arrested for kerala firecrackers accident
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் நீலீஸ்வரம் அருகே அஞ்சூற்றம்பலம் பகுதியில் உள்ள வீரர்காவு கோவிலில் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சாமுண்டி வேடமணிந்து தெய்யம் ஊர்வலம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அப்போது, கோவில் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் இருந்து தீப்பொறிகள் வெளியாகி, கோவில் அருகே பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் விழுந்து, பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பீதி அடைந்து, நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குடோன் அருகே நின்றிருந்த பக்தர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். மேலும் வெடி விபத்தில் கோவில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த வெடிவிபத்து சம்பவம் குறித்து நீலீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதி பெறாமல் பட்டாசுகளை வைத்திருந்ததாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
English Summary
three peoples arrested for kerala firecrackers accident