டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார்..? பதவியேற்பு விழா எப்போது..?
Who will be the next Chief Minister of Delhi
டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றி, 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில்,டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்பதை ஒரு வாரமாக தீர்மானிக்க முடியாமலும் தேர்ந்தெடுக்க முடியாமலும் பா.ஜ.க. மேலிடம் திணறி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, டெல்லியின் புதிய முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள், பெண் எம்.எல்.ஏக்கள் என பலரும் முட்டி மோதுகின்றனர். இவர்களில் யாரை தேர்ந்தெடுத்தாலும் மற்றொரு தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் முடிவடைந்த பின்னர் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு பார்வையாளர் குழுவையும் பா.ஜ.க. மேலிடம் அமைத்திருந்தது.
குறித்த மேலிடப் பார்வையாளர் குழுவினர் 48 எம்.எல்.ஏக்களையும் அழைத்து பேசி அவர்களது கருத்துகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சி சட்டசபை உறுப்பினர்கள் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் 03 மணிக்கு டெல்லி பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் கூடி முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்ய உள்ளதாக பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அனைத்து பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்களுக்கும் கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு புதிய முதலமைச்சர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
தற்போதைய டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 23-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் டெல்லி புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 18-ஆம் தேதி) ராம்லீலா மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Who will be the next Chief Minister of Delhi