தவிர்க்க முடியாத மன அழுத்தத்தில் இருந்து, ஈசியாக தப்பிக்க இதோ டிப்ஸ்.!
How to reduce stress
தற்போது பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அன்றாடம் மிகுந்த அவதிப்படுகிறோம். இந்த மன அழுத்தம் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் நம் வாழ்வில் இது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
நம் மனம் ஏற்றுக் கொள்ளாத அல்லது பிடிக்காத செயல்கள் நம் வாழ்வில் நடக்கும் போது அது நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
• குடும்ப பிரச்சினை,
• வேலையில் ஏற்படக்கூடிய தொல்லைகள்,
• மேல் அதிகாரிகளின் அழுத்தம்,
• தனிப்பட்ட உறவுகளினால் ஏற்படக்கூடிய கவலைகள் உள்ளிட்டவை
நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட மன அழுத்தத்தை போக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
போட்டிகள் நிறைந்த உலகில் வாழும் போது மற்றவர் நமக்கு கொடுக்கும் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையில் பிரச்சினைகள் இருக்கின்றது. எனவே நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை நடக்கிறது என்று நினைத்து கவலை அடைய கூடாது.
ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது? என்ற சுய பச்சாதாபம் நமக்கு ஏற்பட்டால் அது நமது தன்னம்பிக்கையை உடைக்கும். இதனால் நம் மீது நமக்கு பரிதாபம் ஏற்பட்டு மன ரீதியான சோர்வுக்கு ஆட்படுவோம்.
அலுவலக பணி சுமையினால் இது போன்ற அர்த்தம் ஏற்படலாம். அதை நினைத்து புலம்புவதால் எந்த பயனும் இல்லை. நம் மீது தவறு இருந்தால் அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படி தவறு இல்லாத பட்சத்தில் இந்த விஷயத்தை போட்டு குழப்பிக் கொள்ளாமல் மனதை மடை மாற்ற வேண்டும்.
பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இருக்கும் சிறந்த வழி அதிகமாக சிரித்துக் கொண்டே இருப்பது தான். எனவே நமக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை அதிகரிக்க, என்ன செய்யலாம் என்று பாருங்கள்.
அன்றாடம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா மற்றும் இறகு பந்து விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்வது மனதை திசை திருப்ப உதவும்.
சிலருக்கு தன்மீது நம்பிக்கை இருக்காது. எதற்கு எடுத்தாலும் தன்னால் முடியாது, தனக்கு நடக்காது என்ற எதிர்மறை சிந்தனைகள் இருக்கும். இதுவே நம் மன மகிழ்ச்சியை கெடுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது போன்ற எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு, முயற்சி செய்து தோல்வி அடைந்தால் கூட அது நமக்கு உறுதியான மனதை ஏற்படுத்தும். எனவே தன்னம்பிக்கையுடன் இருப்பது மன அழுத்தத்தை குறைக்க நல்ல வழி.
உறவில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை மனதிற்குள் போட்டு குழப்பிக் கொள்ளாமல் எந்த உறவில் பிரச்சனையோ அவர்களுடன் அமர்ந்து மனது விட்டு பேசி பிரச்சனைக்கான தீர்வுகளை தேர்ந்தெடுக்கலாம். மாறாக யாரிடமும் ஆலோசிக்காமல் மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பது நம் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
உங்களுக்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள். மாதத்தில் ஒரே ஒரு முறையாவது உங்களுக்கு பிடித்த நபரை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும். இது உங்கள் நண்பராகவோ அல்லது உறவினராகவோ கூட இருக்கலாம்.