திருவிழா: கோலாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது? கோலாட்டத்தின் திறப்பு.!
kolattam thiruvizha special in tamil 2022
கோலாட்டம்:
இரண்டு கையிலும் ஒரு முழ கோல்களை கொண்டு குறைந்தது 6 பேர் முதல் வட்டமாக நின்று அனைவரும் ஒருமித்த மனதோடு கை, கால்களை அசைத்து தங்களின் விருப்ப தெய்வத்தை நினைத்து பாடல் பாடி கொண்டு ஆடும் ஆட்டம் கோலாட்டம் ஆகும். மேலும் கோலாட்டமானது 'பெண்களின் சிலம்பாட்டம்" எனவும் அழைக்கப்படுகிறது.
கோலாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?
கோலாட்டத்தில் ஆண்கள் வேட்டி மற்றும் சட்டை அணிந்தும், தலையில் ரிப்பன் கட்டியும் ஆடுகின்றனர். பெண்கள் வழக்கமான உடையுடன் கோலாட்டம் ஆடுகின்றனர். ஆனால், தொழிற்முறை கலைஞர்கள் குழு ஆட்டம் ஆடும்போது ஒரே நிறத்தில் உடையைத் தேர்வு செய்து அணிந்து கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.
பொதுவாக கோலாட்டத்தை சிவபெருமான், விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களை நினைத்து பாடல் பாடிக் கொண்டு ஆடுவர். கிருஷ்ணனை நினைத்து வட மாநிலங்களில் ஆடப்படும் கோலாட்டத்திற்கு 'தாண்டியா" எனப் பெயர்.
கோலாட்டத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை எதுவுமில்லை ஆயினும் எட்டு முதல் பன்னிரண்டு பேர் ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆடுவோரைத் தவிர பாடுபவர், இசைக்கலைஞர்கள் என எண்ணிக்கை நிகழ்வு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
கோலாட்டத்தில் பல சிக்கலான அடிவைப்பு முறைகள் காணப்பட்டாலும் மின்னல் வேகத்தில் அவர்கள் மாறி மாறி தடுமாற்றமின்றி ஆடுவது சிறப்பு.
மேலும் கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் சிறப்பானது. இந்த ஆட்டத்தில் உயரத்தில் கட்டப்பட்ட வண்ணத் துணிப் பட்டைகளின் ஒரு நுனி கோலாட்டம் ஆடுபவர் கையில் இருக்கும். ஆட்டக்காரர்கள் ஆடிக் கொண்டே பின்னலைப் போடுவதும் பின்னர் அவர்களே ஆடியவாறு அதனைச் சிக்கல் இல்லாமல் பிரித்து விடுவிப்பதும் இதன் சிறப்பாகும்.
இதில் சிறு பிழை ஏற்பட்டாலும் பின்னலில் சிக்கல் விழுந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு ஆடும் பின்னல் ஆட்டத்தில் இருப்பத்தியொரு பின்னல் கோலாட்ட முறைகள் உள்ளன.
இசைக்கருவிகள் :
கோலாட்டத்தில் ஆர்மோனியம், மத்தளம், ஜால்ரா, பேண்ட் வாத்தியம், குந்தளம், தவில் போன்ற இசைக்கருவிகள் பயன்படுகின்றன.
இலக்கியப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைப்பாடல்கள், தெம்மாங்கு, பள்ளு, காவடிச்சிந்து, கும்மி, மாரடிப்பாடல், திரையிசைப் பாடல்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட பாடல்கள் கோலாட்டத்தில் பயன்படுகின்றன.
வகைகள் :
கோலாட்டம்
பின்னல் கோலாட்டம்
கோலாட்டக்கும்மி
பயன்கள் :
ஒருமித்த மனதோடு அனைவரும் கோலாட்டம் ஆடுவதால் கவலைகள் மறந்து மனதை ஒருநிலைப்படுத்த பயன்படுகிறது.
கை, கால்களை அசைத்து தொடர்ந்து ஆடுவதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறுகின்றன. மேலும் கோலாட்டமானது சிறந்த மூச்சுப்பயிற்சி கலையாகவும் உள்ளது.
ஆண், பெண் என வேறுபாடின்றி அனைவரும் கையில் கோலேந்தி வேற்றுமையை மறந்து ஒன்றாக பாடிக்கொண்டு ஆடும் கோலாட்டம் கூட்டு மனப்பான்மைக்கான சிறந்த கலையாகவும் விளங்குகிறது.
English Summary
kolattam thiruvizha special in tamil 2022