இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம்; தேர்தல் ஆணையகத்துக்கு பறந்த மனு..!
Petition to the Election Commission regarding the issue of the two leaves and the General Secretary
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் அனுமதி அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்தது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சூரியமூர்த்தி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் இல்லை. தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர்.
அவருக்கு அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மனுவில், உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், அது குறித்து சிவில் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தில் முறையிட முடியாது. எனவே சூரியமூர்த்தி மனுக்களை நிராகரிக்க வேண்டும் என, அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Petition to the Election Commission regarding the issue of the two leaves and the General Secretary