விஜய் மாநாடு நேரத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!
ADMK EPS Announce Election Voter list TVK Manadu
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஆற்ற வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2025-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான பணிகள் நடைபெற உள்ளது.
* ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 29.10.2024 - செவ்வாய் கிழமை
* திருத்தங்கள் மற்றும் ஆட்சேபனைகள் செய்வதற்கான காலக்கெடு - 29.10.2024 - செவ்வாய் கிழமை முதல் 28.11.2024 - வியாழக் கிழமை வரை
* சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் - 09.11.2024 - சனிக் கிழமை 10.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 23.11.2024 - சனிக் கிழமை 24.11.2024 -ஞாயிற்றுக் கிழமை
* இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 06.1.2025 - திங்கட் கிழமை
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; மாவட்டம் / ஒன்றியம் / நகரம் / பேரூராட்சி / பகுதி / கிளை / வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் (BLA-2) தனிக் கவனம் செலுத்தி,
* 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும்;
* வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும்;
* புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும்;
* ஒரு நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு நீக்கம் செய்வதற்கும்;
* வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும்;
* வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும், தேவையான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும்.
அதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாகத் தெரியவந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.
கழகத்தின் சார்பில் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பித்திட வேண்டும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிப்பதற்கும், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்து இப்பணியை முடித்து, இதுசம்பந்தமாக தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விபரங்களை தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Announce Election Voter list TVK Manadu