டெல்லி பயணம் | அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி!
ADMK EPS invited to attend consultative meeting on G20 Summit
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியை வழி நடத்தி கொண்டு இருக்கிறார்.
அதே சமயத்தில், பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஒருபக்கம் தனியாக, தங்கள் தான் அதிமுக என்று செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், அதிமுகவின் பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அதிமுகவில் பல மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜி 20 உச்சி மாநாட்டின் அடுத்த கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் 'அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான' எடப்பாடி கே பழனிச்சாமிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில மரியாதையை செலுத்தியபின், காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK EPS invited to attend consultative meeting on G20 Summit