மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி! ஆனால் ஸ்டாலினுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி!
AIADMK Interim General Secretary Palaniswami discussed on Twitter space
எதிர்தரப்புடன் விவாதம் செய்யும் பொழுது கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. இன்று காலை அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் சிலைகளுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அதிமுகவின் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக டிவிட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் பேசியுள்ளார்.
ஸ்டாலின் பாவம் அவர் ஒரு பொம்மை முதல்வர்!
தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர். அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆட்சியை நடத்துவதாகவும் பேசினார். திமுக ஆட்சியில் உள்ள குறைபாடு, கட்சி நிர்வாகிகளின் செயல், திமுக ஆட்சி மீது மக்கள் கொண்ட அதிருப்தி என பல குறைபாடுகளுடன் திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்றால் ஸ்டாலினுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி விழுகிறது என ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
விவாதத்தின் போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்!
மேலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். எதிர் தரப்பினருடன் விவாதம் செய்யும் பொழுது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் வாதத்திற்கு சரியான முறையில் ஆதாரங்களுடன் எதிர் வாதத்தினை முன் வைக்க வேண்டும். அவர்கள் பேசும் அநாகரிக பேச்சுக்களுக்கு ஈடு கொடுத்து பேசாமல் கண்ணியமான வார்த்தைகளை பேசி அதிமுகவின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுகவிற்கு எதிராக யூட்டியூப் சேனல் தொடங்குங்கள்!
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்ந்த நிர்வாகிகளுக்கு திமுக ஆட்சியில் நிலவும் அவலங்களையும் கொடுமைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க யூடியூப் சேனல்களை தொடங்குமாறு பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் அராஜக போக்கை பொதுமக்களிடம் கொண்டு செல்ல இது போன்ற தகவல் தொழில்நுட்ப வழிகளை பயன்படுத்தி மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வது அதிமுகவினரின் கடமை என ட்விட்டர் ஸ்பேசில் அதிமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
English Summary
AIADMK Interim General Secretary Palaniswami discussed on Twitter space