திமுகவின் கனிமவள கொள்கையை கண்டித்து தென்காசியில் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
AIADMK protest in Tenkasi against DMKs mineral policy
திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்; தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.
கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 06-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்று எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
AIADMK protest in Tenkasi against DMKs mineral policy