நீர், நிலம், விவசாயத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன், குறிஞ்சிப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றினார்.
அவரின் அந்த உரையில், "இக்கூட்டத்தின் நோக்கம் நீர், நிலம், விவசாயம், ஆகாயத்தை பாதுகாக்க வேண்டும். மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும். கடலூர் மாவட்டம் வளம் பெறுகின்ற மாவட்டமாக, வளமான மாவட்டமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது. ஆனால் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் உள்ள பகுதி அதிக ரசாயன கழிவுகள் இருக்கின்ற பகுதியாக இருக்கிறது. அப்பகுதியில் உள்ள தாய்மார்களின் தாய்ப்பாலில் டயாக்சின் கலந்து இருக்கிறது. அவ்வளவு நச்சுத்தன்மை கலந்ததாக, அங்கிருக்கின்ற நீர், நிலம், காற்று மிக மோசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த நிலையை எதிர்த்து எத்தனையோ போராட்டங்களை நானே நடத்தியிருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி, போராடி, உச்சநீதிமன்றம் சென்று தீர்ப்புகளை வாங்கிய பின்பு தான், இன்று ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு இருக்கிறது.
கடலூர் சிப்காட் பகுதிக்கு, அடுத்தபடியாக, என்எல்சி நிறுவனம் 66 ஆண்டுகளாக, இங்கே இருக்கின்ற மண்ணை சுரண்டி, நீரை வெளியேற்றி, காற்றை மாசுப்படுத்தி, வாழ்வாதாரத்தை அழித்து, விவசாயத்தை நசுக்கி, லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்து, இங்கே மக்களுக்கும், மண்ணுக்கும் எதுவும் செய்யாமல் கடலூர் மாவட்டத்தின் மத்தியில் அமைந்து இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இருக்கின்ற மற்றுமொரு பிரச்சனை சைமா. இந்த சைமாவிற்காக 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, ஈரோடு, பவானி, திருப்பூரில் உள்ள சாயக்கழிவுகளை எல்லாம் குழாய் மூலமாக கொண்டுவந்து, இங்கே சுத்திகரிக்கப்பட்டு, கடலில் கலக்கின்ற திட்டம். இப்படி ஒட்டுமொத்தமாக, திரும்பும் பக்கமெல்லாம் கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் திராவிட கட்சிகள். மக்களைப் பற்றியும், மண்ணைப் பற்றியும் இவர்களுக்கு எந்த கவலையும், அக்கறையும் கிடையாது.
விவசாயிகளுக்கே விவசாயத்தைப் பற்றிய அக்கறை கிடையாது. பணம் வந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்திருக்கிறேன். கடலூர் மாவட்டம் என்னுடைய மாவட்டம், மாவட்டங்கள் பிரிக்கப்படும் முன்பு தென்னாற்காடு மாவட்டமாக தான் இருந்தது.
கடலூர் மாவட்டம் என்றாலே தமிழ்நாட்டுக்கு வடிகால். தருமபுரியில் மழை பெய்தால் கடலூரில் வெள்ளம் வரும், சேலத்தில் மழை பெய்தால் கடலூரில் வெள்ளம் வரும், வேலூரில் மழை பெய்தாலும் கடலூரில் தான் வெள்ளம் வரும். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்திற்கும் கடலூர் மாவட்டம் தான் வடிகால். கடலூர் மாவட்டத்தில் தான் கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆறு, வெள்ளாறு, காவிரி ஆறு இப்படி பல ஆறுகள் கடலில் கலக்கின்றன. கடலூர் மாவட்ட த்தில் வாழ்கின்ற மக்களுக்கு, வாழ்கின்ற சூழலே இல்லாமல் போய்விட்டது. அனைத்திற்கும் உச்சமாக இந்த என்எல்சிக்காரன் மோசம் செய்து கொண்டிருக்கிறான்.
என்எல்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி விட்டேன். இந்த கூட்டத்தை குறிஞ்சிப்பாடியில் ஏன் போட சொன்னேன் தெரியுமா?

இரண்டு நாள் நடைப்பயணம், என்எல்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினேன். அடுத்த அது தான் நடக்கப்போகிறது. இதையெல்லாம் ஏன் செய்திருக்கிறேன் என்றால், உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டும்தான். விழித்துக் கொள்ளுங்கள். கடலூர் மாவட்ட மக்களே இது என்னுடைய பிரச்சினை கிடையாது, என்னுடைய நிலத்தை அவர்கள் எடுக்கவில்லை என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.
'அங்க தான நிலம் எடுக்குறாங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, என் நிலம் இங்க தான இருக்கு' அப்படின்னு நினைச்சுக்காதீங்க. 66 வருடமாக என்எல்சி நெய்வேலி பகுதியில் தண்ணீரை உறிஞ்சி, உறிஞ்சி நிலக்கரியை எடுக்க நிலத்தை எப்படி பறித்தான் என்று உங்களுக்கு தெரியும். 400 அடிக்கு கீழ குழி தோண்டி அங்கிருந்தம் தண்ணீரை எடுத்து ராட்சத குழாய்களால் உறிஞ்சி கடலில் வீணாக வெளியேற்றினான்.
இதனால் அந்த பகுதியில் மட்டும் பாதிப்பு கிடையாது. இங்கு குறிஞ்சிப்பாடி பகுதியிலும் பாதிப்பு வரும். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அங்கு கடலூரில் தானே, நெய்வேலியில் தானே, கம்மாபுரம் ஒன்றியத்தில் தானே, புவனகிரியில் தானே நிலம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அங்கு இருக்கின்ற தண்ணீரை இதே போல உறிஞ்சி எடுத்தால், இங்கே உங்களுக்கு நிலத்தடி நீர் கீழே போகும். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நெய்வேலி என்.எல்.சி.யால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் இப்படி அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பக்கத்தில் உள்ள விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் பாதிப்பு உண்டாகிறது.
இப்படியாக இந்த என்எல்சி நிறுவனம் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க, அதைப் பற்றி கவலைப்படாத திராவிட கட்சிகள் 55 ஆண்டு காலமாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வருகை தந்திருக்கிறேன். கடலூர் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், அதிலும் குறிப்பாக குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு வாழ்வாதாரம், விவசாயம், நீர், நிலம் எல்லாம் போய்விடும்.