மே.வங்கத்தில் கம்னியூஸ்ட்களின் ஆட்சி அகற்றப்பட்டதை, திமுக அரசுக்கு சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் விடுத்த எச்சரிக்கை.!!
Anbumani warned DMK govet will be removed from power
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நேற்று என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பாமகவினர் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனால் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாமகவினர் 26 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் "நெய்வேலி நேற்று நடந்தது விவசாயிகளை சார்ந்த போராட்டம். அந்தப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி விட்டு, எங்கள் கட்சித் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ஒரு பதட்டமான சூழலை உருவாக்கியது காவல்துறை. பிறகு எங்கள் மேல் பழியை போட்டு, எங்கள் தொண்டர்கள் 26 பேர் மீது கடுமையான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
முதலமைச்சருக்கும், நேற்று பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் நான் சொல்வதெல்லாம் விவசாய விரோத போக்கை திமுக அரசு கடைபிடிக்க கூடாது. இதை நான் திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு எதிரான போக்கை அன்றைய கம்யூனிஸ்ட் அரசாங்கம் கடைப்பிடித்ததன் காரணத்தால் தான் அவர்களுடைய ஆட்சி மேற்கு வங்கத்தில் இருந்து அகற்றப்பட்டது.
உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை. உங்களுடைய கவுன்டவுனை என்எல்சியிலிருந்து தொடங்க வேண்டாம். நெய்வேலியில் நடைபெறுவது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறீர்களே.! உங்களுக்கு மனசாட்சி இல்லையா.? கதிர்விடும் நெற்பயிர்களை அழிப்பதற்கு யாருக்காவது மனசு வருமா? மனசாட்சி இல்லாத பேய்களுக்கு மட்டுமே இருக்கும். அவ்வாறு மனசாட்சி இல்லாமல் இருக்கும் என்எல்சிக்கு திமுக அரசு, அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர்.
விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்துவிட்டால் வளர்ச்சி வந்து விடுமா? கடலூர் மாவட்ட ஆட்சியர் நெல் அழிந்ததற்கு இழப்பீடு கொடுத்து விடுவோம் என சொல்கிறார்.
அரிசியை சாப்பிடலாம், பணத்தை சாப்பிட முடியுமா? என்எல்சி நிலம் கையகப்படுத்துவதை முதலமைச்சர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இன்றோடு அதை முடித்து விடுங்கள்.
நாங்கள் இதை விடுவதாக இல்லை. நீங்கள் நிறுத்தும் வரை நாங்கள் கடுமையான போராட்டங்களை செய்வோம். நேற்று பார்த்ததெல்லாம் ஒரு சாம்பிள் தான். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் சொன்னால் என் பின்னால் நிற்க கோடிக்கணக்கான இளைஞர்களும், விவசாயிகளும் தயாராக உள்ளனர்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Anbumani warned DMK govet will be removed from power