என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! மனம் திறந்த மடலில் என்ன சொல்கிறார் அன்புமணி?!  - Seithipunal
Seithipunal


பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு மரங்களை நட்டு, மக்களை மகிழ்வித்து கொண்டாடுவோம் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல் ஒன்றினை எழுதியுள்ளார்.

அந்த மடலில், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, மனித உரிமை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் நாள் வரும் 25&ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் அனைவரின் வணக்கத்திற்குரிய அந்த நாளைக் கொண்டாடுவது குறித்து பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுடன்  எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகத் தான் இந்த மடலை மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மொத்தம் 34 அமைப்புகளைத் தொடங்கியிருக்கிறார் என்றாலும் கூட, அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமான அமைப்பு பசுமைத் தாயகம் தான். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் அவருக்கு இணையான அக்கறையும், புரிதலும் கொண்ட வேறு தலைவர்கள் கிடையாது. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தியவர் மருத்துவர் அய்யா அவர்கள்.

பவானி ஆற்றைக் காப்பதற்காக மேட்டுப்பாளையம் தொடங்கி ஈரோடு வரையிலும், தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து பாலாற்றைக் காப்பதற்காக வாணியம்பாடி முதல் வாலாஜா வரையிலும் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டது, ஜெயங்கொண்டம் பொன்னேரி, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் ஏரி ஆகியவற்றை அவரே முன்னின்று தூர்வாரியது, உலகம் முழுவதும் நடைபெற்ற சுற்றுச்சூழல் சார்ந்த மாநாடுகள் மற்றும் பயிலரங்குகளில் பசுமைத்தாயகம் அமைப்பின் பிரதிநிதிதிகளை பங்கேற்கச் செய்தது என சுற்றுசூழலைக் காக்க அவர் செய்த சேவைகள் ஏராளம்.

மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஊக்குவிப்பது உள்ளிட்டவை தான் பசுமைத்தாயகம் நாளை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ஆகும். உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

பசுமைத்தாயகம் அமைப்பு 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் மற்றும் அவற்றை சார்ந்த பிற அமைப்புகளில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அனைவரும் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது பசுமைத்தாயகம் நாளில் நட வேண்டும். அதுமட்டுமின்றி பசுமைத்தாயகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மரக்கன்று நடும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இந்தப் பணியை  பாட்டாளி சொந்தங்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகளில் உள்ளவர்களுக்கு உணவும், இனிப்புகளும் வழங்கி மகிழ்விக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி  அவர்களை கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கடைபிடிக்க வேண்டியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளையும் பசுமைத்தாயகம் அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani writes letter to all PMK cadres for Pasumai thayagam Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->