திமுகவினருக்கு தான் வருமானம்.."அரசாணையை உடனே திரும்ப பெறுக".. அண்ணாமலை எச்சரிக்கை..!!
Annamalai condemned for allowing alcohol consumption in marriage halls
தமிழகத்தில் பார்கில் மற்றும் நட்சத்திர விடைகளில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யும் மற்றும் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமூகக்கூடங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அந்த அரசாணையில் ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட சிறப்பு அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் குடும்ப நிகழ்ச்சி முதல் பொது நிகழ்ச்சி வரை மது அருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்"என பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai condemned for allowing alcohol consumption in marriage halls