மோடி ஸ்டிக்கரால் முடங்கிய கால்நடை ஆம்புலன்ஸ்கள்.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!!
Annamalai condemned for non use of animal ambulances
மோடி ஸ்டிக்கர் ஒட்டுவதா..? ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதா..? என்ற போட்டியில் 250 புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் ரூ.39 கோடி செலவில் வாங்கப்பட்ட 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமல் 6 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள டீலரிடம் இருந்து வருகிறது.
அவற்றில்பிரதமர் மோடியின் படத்தை ஒட்டுவதா அல்லது முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டுவதா என்ற போட்டிதான் அவை பயன்படுத்தப்படாததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள்.
கால்நடைகள் நோய் பாதிப்பினாலும், எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளாலும், கன்று ஈனுவதிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அவற்றுக்கான உடனடி மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசுடனும் இணைந்து, 1962 என்ற அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது.
இதன் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும், லட்சக்கணக்கான கால்நடைகள் உடனடி மருத்துவ உதவி மூலம் பலன் பெற்று வருகின்றன. தமிழகத்திலும், கடந்த ஆண்டு வரை சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகள் பயன்பெற்றுள்ளன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியில் வாங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் உள்ளது எனும் காரணத்துக்காக, திறனற்ற திமுக அரசு முடக்கி வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலம், கால்நடைகளுக்கான அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
உடனடியாக, அனைத்து கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அற்ப அரசியலை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் காட்ட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai condemned for non use of animal ambulances