பெட்ரோல் குண்டு வீசி பாஜக நிர்வாகிகளின் தைரியத்தை குறைத்து விட முடியாது - பாஜக அண்ணாமலை.!
BJP Annamalai speech about kovai petrol Bomb issue
கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பாஜக அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும், பாஜக நிர்வாகிகளின் 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் "கோயம்புத்தூர் பா.ஜ.க கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
BJP Annamalai speech about kovai petrol Bomb issue