ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி.. பாஜக தேர்வு கமிட்டி தேர்வு செய்தது..!
BJP Selection Committee Selected Mohan Charan Majhi As Odisha CM
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியை தோற்கடித்து முதல் முறையாக ஒடிசாவில் பாஜக காலூன்றி உள்ளது. முன்னதாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தான் கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவை ஆட்சி செய்தார்.
ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மேலும் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஒரு வாரமாகியும், ஒடிசா முதல்வரை தேர்வு செய்வதில் பாஜகவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒடிசா முதல்வரை தேர்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து மாநில பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 4 முறை ஒடிசாவில் எம்எல்ஏ - வாக இருந்த மோகன் சரண் மாஜியை ஒடிசா முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையடுத்து மோகன் சரண் மாஜி எம்எல்ஏ க்களின் ஆதரவுக் கடிதத்துடன் மாநில ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்றும், மேலும் ஜூன் 12ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
BJP Selection Committee Selected Mohan Charan Majhi As Odisha CM