விருந்தில் கொகைனா? உடனே விசாரிங்க.. - பாஜகவால் கமலுக்கு நெருக்கடி.!!
BJP urges investigation on suchitra drug allegation
பிரபல பாடகி சுசித்ரா கமலஹாசன் கொடுக்கும் விருதுகளில் வெள்ளித் தட்டில் வைத்து போதைப் பருளான கொகைன் சப்ளை செய்யப்படுவதாகவும், அதனை ஏற்க மறுத்த தன்னை விமர்சனம் செய்வதாகவும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதள பக்கத்தில் "குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதை பொருளான Cocaine (கொகைன்) அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் அவருடைய முன்னாள் கணவர் Cocaine எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மையில்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
BJP urges investigation on suchitra drug allegation