கோபாலபுரத்தில் கை வைத்த பாஜகவின் முக்கிய புள்ளி! மத்திய அமைச்சரிடம் செல்லும் விவகாரம்!
BJP Vinoj P Selvam Say about Gopalapuram Boxing Stadium issue
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஆளுங்கட்சி முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளும் அரசியல் ரீதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைவர்கள், தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கு உண்டான பணிகளையும் ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்துவரும் பாஜக, அனைத்து தொகுதிகளிலும் திமுகவை வீழ்த்துவதற்கு உண்டான திட்டங்களை வகுத்து, அதன்படி செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக மும்மரமாக இறங்கி வருகிறது.
இதில், பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஓடி ஓடி கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை மாநகரில் அமைந்துள்ள மிகப் பழமையான விளையாட்டு மைதானங்களில் ஒன்றான கோபாலபுரம் ஸ்டேடியத்தின் இன்று நேரடியாக வினோஜ் பி செல்வம் பார்வையிட்டார்.
இந்த மைதானத்தில் முறையான பராமரிப்புகள் எதுவும் இல்லாமல், அடிப்படை வசதிகள், கழிவறை மற்றும் பெண் வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்வதற்கான உடைமாற்றும் அறை கூட இல்லாத அவலமான சூழ்நிலை இருப்பதை சுட்டிக்காட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் வினோஜ் பி செல்வம்.
மேலும் அவரின் அந்த பதிவில், "6வது முறையாகத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கோபாலபுர குடும்பம் அப்பகுதியில் உள்ள மைதானத்தை மேம்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று விளையாட்டு துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய தாத்தா கருணாநிதி உடன் இணைந்து இந்த பகுதியில் தான் வசித்து வந்தார் என்பதை நாம் நினைவு கூற வேண்டி உள்ளது.
இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ மருத்துவர் எழிலன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கோபாலபுரம் மைதானத்தில் உள்ளே பாக்சிங் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தில், தமிழ்நாடு அரசு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி மையத்தில், அனைத்து மக்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறான கணிப்பு.
ஏற்கனவே இது போன்று பல பயிற்சி மையங்களை கட்டி, அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் கிளப்பிடம் ஒப்படைக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது.
இந்த கோபாலபுரம் பாக்சிங் பயிற்சி மையத்தை திமுகவின் ஆதரவு பெற்ற ஒருவருக்கு ஒப்படைக்கின்ற திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ஒப்படைக்கப்பட்டால் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே பயிற்சி பெறுகின்ற ஒரு மையமாக இது மாறிவிடும். ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இதேபோன்று டென்னிஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட்ட பின்னர், அது தனியார் கிளப் போல செயல்பட்டு வருவதை விளையாட்டு வீரர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதே நிலை இங்கும் ஏற்படுமோ என்ற கவலை வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
முரசொலிக்குச் சந்தா கட்டுபவர்களுக்கு மட்டுமே பாக்சிங் அகாடமி என்றாகிவிடக்கூடாது என அப்பகுதி இளைஞர்கள் என்னிடம் முறையிட்டார்கள்.
இந்த விவகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று இதனைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்தேன்" என்று வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vinoj P Selvam Say about Gopalapuram Boxing Stadium issue