ஜீ தமிழ் Vs பாஜக விவகாரம்: போர்க்கொடி தூக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!
bjp zee tamil issue cpim condemned
ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எதிராக பாஜகவினரின் மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "முட்டாள் மன்னன என்ற சிறுவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி பிரதமர் மோடியைத்தான் குறிக்கிறது என்று பாஜக மாநில தலைவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுத்ததுடன், தனது ஒன்றிய அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அத்தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தொடர் அவதூறு மேற்கொண்டு பிரிவினை விதைக்கும் நபர்களின் 'கருத்துரிமைக்கு' போராடுவதாக, சில நாட்கள் முன் போராளி வேடம் போட்ட பாஜகவினர், இப்போது பள்ளிச் சிறுவர்களின் பகடியைக் கூட பொறுக்க முடியாமல் தாக்குதலை முன்னெடுக்கிறார்கள்.
அரசு நிர்வாகத்தை வைத்து ஊடகங்களை மிரட்டுவதன் மூலம் மக்களின் விமர்சனங்களை ஒடுக்கிவிடலாம் என முயற்சிக்கிறார்கள். இந்த போக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைக்கு எதிரானது என்பதுடன் சர்வாதிகார மிரட்டலாகும். எனவே, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள ஒன்றிய அமைச்சகத்தின் கடிதத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
விமர்சிப்பவர்களை அச்சுறுத்துவது, மிரட்டல் விடுவது, கொலை செய்வது, அரசு நிர்வாகத்தை ஏவி விட்டு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற சர்வாதிகார நடவடிக்கையில் பாஜகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவினரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் வலுவாக குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
bjp zee tamil issue cpim condemned