கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய த.வெ.க.வினர் 81 பேர் மீது வழக்கு பதிவு ..!
Case registered against 81 TVK members
தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்களை கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் த.வெ.க தலைவர் விஜய் எழுதிய நோட்டீசை அந்த கட்சியின் தொண்டர்கள் மாணவ, மாணவிகளிடம் வினியோகம் செய்து வருகின்றனர்.
நேற்று சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்தபோது கட்சியின் தொண்டர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் நேற்று மாலை கோவை மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
குறித்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
த.வெ.க., தலைவர் விஜய் அவர்கள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தன் கையால் எழுதிய கடிதத்தில்;
கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் என, அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று, பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்; அண்ணனாகவும், அரணாகவும்.
எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என அவரது கடித்ததில் குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Case registered against 81 TVK members