முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான பதிவான வழக்கு ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் .!
Chennai High Court quashes case against former minister Jayakumar
உள்ளாட்சி தேர்தலின் போது விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிக்கு நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. அப்போது அதற்கு எதிரான அதிமுகவினர் ஜெயகுமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக இருந்ததாகக் கூறி 4 பிரிவுகளில் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் இதை தட்டி கேட்ட போது தாக்குதல் மற்றும் கல் எறிதல் சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டதாகவும், அது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
English Summary
Chennai High Court quashes case against former minister Jayakumar