உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக.. காங்கிரஸில் இருந்து முதல் கண்டன குரல்!
Congress leader KaranSingh condemns Udayanidhi statement on SanatanaDharma
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசு டெங்கு மலேரியா கொரோனா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்த கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி மற்றும் பீகார் ஆகிய மாநில காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, நாட்டு மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சனாதனம் குறித்து உதயநிதியின் அபத்தமான கூற்று மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் நோக்கங்களை குறைவாகவே பின்பற்றுகிறார்கள்.
திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, சிதம்பரம், ராமேஸ்வரம் மற்றும் பல சனாதன கோவில்கள் தமிழகத்தில் உள்ளது. பொறுப்புள்ள அரசியல்வாதிகளிடமிருந்து இது போன்ற கருத்துக்கள் வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. அற்புதமான தமிழ் கலாச்சாரத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் உதயநிதியின் சனாதனம் குறித்தான கருத்துக்கு நான் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறேன்" என அறிக்கை மூலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
Congress leader KaranSingh condemns Udayanidhi statement on SanatanaDharma