தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு - தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2022 நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்,ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக! சிபிஐ(எம்) மாநிலக்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே கூடுதலாக பெய்துள்ளது. குறிப்பாக,  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 122 சென்டிமீட்டர் பெய்து மிகப்பெரிய பாதிப்புகளை அந்த மாவட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது.  சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல்பயிர் பாதிப்பு, கரும்பு, வாழை, தோட்டக்கலை பயிர்கள் என விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பயிர் பாதிப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடை பாதிப்பு, மனித உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட பணிகள் காரணமாக, கடந்த காலத்தைப் போல தண்ணீர் தேங்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம். 

 மேலும், தமிழ்நாடு அரசு பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட உடனடியாக உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். நெல்லுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் மற்ற பயிர்களுக்கு பாதிப்பின் அளவிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க முன்வர வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது. தீர்மானிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையின் அளவை உயர்த்துவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை போதுமானது அல்ல. 

வீடுகளில் தண்ணீர் புகுந்து, வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பகுதியாகவோ முழுமையாகவோ இடிந்த வீடுகளுக்கு ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் செலுத்தும் காலத்தை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதோடு அதற்கான பிரிமியத் தொகையை தமிழக அரசே செலுத்திட வேண்டும். கால்நடைகள் பாதிப்புக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.  மேலும், மருத்துவ முகாம் நடத்துவது, நடமாடும் மருத்துவ வாகனங்களை தேவையான அனைத்து பகுதிகளுக்கும் அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 இயற்கை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான பேரிடர் நிதி வழங்க முன்வர வேண்டும் என்று சிபிஐ (எம்) மாநிலகுழு கோருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Request to Heavy rain Flood Relief Fund 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->