ஊழலும் கையூட்டும் ஆண்டாண்டு காலமாக கொடி கட்டி பறப்பதற்கு இதுவே சான்று - இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கம்!
Director Thankar Bachan Say About Worst Road
குண்டும் குழியுமான சாலைகளை அமைத்து விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் தண்டனைக்குள்ளாவதில்லை. இனியாவது இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று, சமூக ஆரவாளரும், திரைப்பட இயக்குனருமான தங்கர் பச்சான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மக்கள் பணத்தில் அமைக்கப்படும் தரமற்ற சாலைகளும், அரசு கட்டிடங்களும், பாலங்களுமே ஊழலும் கையூட்டும் ஆண்டாண்டு காலமாக கொடி கட்டி பறப்பதற்கு சான்றாக விளங்குகின்றன.
உலகில் எங்கும் இல்லாதபடி ஆண்டுக்கு ஆண்டு ஒட்டு போட்டு சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் பயன்பாட்டில் இருக்கும் போது 50 ஆண்டுகள் கூட நிற்காத பாலங்களும், 20 ஆண்டுகள் கூட நிற்காத கட்டிடங்களும் உருவாகிக் கொண்டிருப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை.
சட்ட நுணுக்கங்களை கரைத்துக் குடித்த வழக்கறிஞர்களும் நீதிமான்களும் இத்தகைய சாலைகளில் தான் நாள்தோறும் பயணிக்கின்றனர்!
இத்தகைய கட்டிடங்களில் அமர்ந்து கொண்டு தான் வழக்கினை அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை தண்டிக்கின்றனர்!
குண்டும் குழியுமான சாலைகளால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சாலைகளை அமைத்து விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் தண்டனைக்குள்ளாவதில்லை.
எவை எவற்றையோ ஆய்வு செய்து யார் யாரெல்லாமோ தண்டிக்கப்படும்போது இத்தகைய குற்றவாளிகள் மட்டும் ஏனோ தண்டிக்கப்படுவதில்லை!
இனியாவது இதற்கொரு தீர்வு காண வேண்டும்! வழி பிறந்தால் உங்களை வணங்குவோம்!! போற்றுவோம்!! - தங்கர் பச்சான்
English Summary
Director Thankar Bachan Say About Worst Road