#ஹைட்ரோ கார்பன் திட்டம்:: ஒப்பந்தம் போட்டது திமுக தான்.. ரத்து செய்ய காரணமும் திமுக தான்.. திமுக அமைச்சரின் உளறல்..!! - Seithipunal
Seithipunal


இதே டெல்டா காரன் தான் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார்..!!

தஞ்சை மாவட்டம் வடசேரி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு மற்றும் அரியலூர் மாவட்டம் மைக்கல்பட்டி ஆகிய டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஆய்வு செய்வதற்கான பணி மேற்கொள்ள ஒப்பந்த புள்ளியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, திமுக, பாமக உட்பட பல அரசியல் கட்சிகள், தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக காங்கிரஸ் பாமக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் "நானும் டெல்டா காரன் தான். நிச்சயமாக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது" என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி "இன்று நானும் டெல்டா காரன் தான் சொல்லக்கூடிய இதே முதல்வர் தான், துணை முதல்வராக இருந்த பொழுது மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து கையெழுத்திட்டார்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது திமுக அரசு தான் என்றும், அதை ரத்து செய்தது அதிமுக அரசுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு: 

மாநில வருவாய் உயரும் என்றே மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தோம்..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திக்கும் போது முதலமைச்சரை குறிப்பிட்டு இந்த டெல்டா காரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவளித்தார் என்று போகிற போக்கில் புழுதி வாரி தூற்றி விட்டு சென்றுள்ளார். மீத்தேன் திட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே திமுக பலமுறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு வரும் என்கின்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை திமுக அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 4ம் நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவ்வாறு ஒப்பந்தம் மேற்கொண்டதற்கு அடிப்படை காரணம் இந்த திட்டத்தின் வாயிலாக மாநில அரசுக்கு வாட் வரி போன்ற வரிகள் மூலம் வருவாய் உயரம் என்பதற்காக தான்.

ஆனால் அந்த ஒப்பந்தத்திலேயே குறிப்பாக இந்த திட்டத்தின் காரணமாக எழக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே லைசன்ஸ் ரத்தாகிவிட்டது..!!

அப்படி சுற்றுச்சூழல் ஆய்வின் போது விவசாய நிலங்கள் பாதிப்படையும் என்று சொன்னால் அந்தத் திட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்ற அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொண்ட பொழுது டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலங்கள் பாதிக்கும் என்று பெரும் எதிர்ப்பை அன்றைக்கு அவர்கள் தெரிவித்தனர்.

அப்படி எதிர்ப்பு வரும்பொழுது கூட விவசாயிகளின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டு அவர்களின் குரல்களை நசுக்க கூடிய முறையில் அவர்களை கைது போன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடாமல் மீத்தேன் திட்டத்தை அதையெல்லாம் செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று துடிப்பு ஏதும் இல்லாமல்  அவர்களுடைய குரலுக்கு செவி சாய்க்கக் கூடிய வகையில் திமுக அரசு இருந்தது.

குறிப்பாக 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்று திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பாகவே அதற்கான லைசன்ஸ் காலம் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் 2017ல் லைசென்ஸ் காலம் முடிந்த ஒரு திட்டத்திற்கு ரத்து செய்வதாக ஒரு அறிவிப்பை அதிமுக வெளியிட்டது என்பது தான் வரலாற்று உண்மை. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிமுக ரத்து செய்தது..!!

அதிமுக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக அரசாணை வெளியிட்டு ரத்து செய்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது திமுக அரசு அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொண்டு வந்த சுற்றுச்சூழல் குறித்தான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அந்த ஷரத்துதான். 

அந்த ஷரத்து இருந்த காரணத்தினால் தான் பின்னாளிலே அது ரத்து செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஷரத்து இருந்த காரணத்தினால் தான் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் மூலம் ஒரு கமிட்டியும் அமைக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய அதிமுக அரசால் அரசாணையும் வெளியிட முடிந்தது. 

திமுக தேர்தல் வாக்குறுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து..!! 

திமுக ஆட்சியில் இருந்தவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். அதேபோன்று இந்த திட்டம் குறித்தான கேள்வி எழும்பொழுது அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றாது என்று தெளிவாக கூறியிருந்தார்.

அதன் பிறகு திமுக தேர்தல் அறிக்கையில் மீத்தேன் திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே மீத்தேன் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குறிப்பிட்டிருந்த அம்சங்களும் ஷரத்துக்களும் தான் காரணம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இபிஎஸ் ஆட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி..!!

இன்றைக்கு தன்னை ஒரு பெரிய விவசாயி என ஊர் எல்லாம் சொல்லிக்கொண்டு குளிர்காய நினைக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இருக்கக்கூடிய அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்துவிட்டு இன்றைய முதல்வரை பார்த்து பேசுவது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை கேட்க விரும்புகிறேன்.

ஆக இந்த திட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் இவை அனைத்தும் நடைபெற்றது என்பதை தெளிவுபடுத்துகிறேன். தன் மீது எழுந்திருக்கக் கூடிய இந்த குற்றச்சாட்டுகளை எல்லா தவறுகளையும் தாங்கள் செய்துவிட்டு அதை மூடி மறுக்கக் கூடிய வகையில் திமுக மீது சேற்றை வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவினரும் எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

திமுக அமைச்சரின் இத்தகைய விளக்கத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு தான் என்றும், அதை ரத்து செய்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுதான் என்றும் தெளிவாகிறது. மேலும் புதிதாக கொண்டுவரக்கூடிய அனைத்து திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது என்பது கட்டாயம். ஆனால் திமுக ஆட்சியில் தான் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி என்பதை கண்டுபிடித்தது போலவும் அதற்கு காரணம் திமுக தான் என்பது போலவும் அமைச்சத்தின் தங்கம் தென்னரசுவின் விளக்கம் அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலடி தருவதாக நினைத்து தன் வாயாலயே அனைத்து உண்மைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு உளறிக் கொட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Explanation on Hydrocarbon Project Approval


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->