அவரின் திடீர் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது - அன்புமணி இராமதாஸ் உருக்கம்! - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவ் மறைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட  தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-ஆவது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர். 

1989-ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த  அவர், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமருக்கு துணை நின்றவர். சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தில்லியில் இருக்கும் நாட்களில் என்னை பலமுறை அழைத்து பேசியிருக்கிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை நான் பலமுறை சந்தித்து நலம் விசாரித்தேன். 

கடுமையான உடல்நலக் குறைவிலிருந்து அவர் நலம் பெற்று மீண்ட போது நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்தேன். அவரது திடீர் மறைவை ஏற்றுக்கொள்வதற்கு எனது மனம் மறுக்கிறது.

சரத்யாதவ் அவர்களின் மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னடைவு ஆகும். சரத்யாதவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமூகநீதி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Mourning to sarthayadav death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->