நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் - 50 நிமிடம் அசராமல் பேசிய அன்புமணி! - Seithipunal
Seithipunal


நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத் தொண்டு அமைப்புகள் நடத்தின. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பசுமை தாயகத்தின் முன்னாள் தலைவரும், பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, “பசுமை தாயகத்தின் தலைவராக ஆறாண்டு காலம் பணியாற்றியிருக்கிறேன். அந்த ஆறு ஆண்டு காலம் எனக்கு மிகவும் பிடித்தமான காலம். அதன் பிறகு தான் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது.  பசுமைத்தாயகம் அமைப்பு மருத்துவர் அய்யா அவர்களால் 1996 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவர் அய்யா அவர்கள் தீர்க்கதரிசி, அவர் அடிப்படையில் ஒரு விவசாயி. எதிர்காலத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்து இதுபோன்ற பல்வேறு அமைப்புகளை தொடங்கினார். 

எனக்கு சிறுவயதில் இருந்து இயற்கை மிக பிடித்தமானது. பசுமை தாயகத்தில் இணைந்த பிறகு தமிழ்நாடு முழுவதுமாக சுற்றிப் பார்த்து வருகிறேன். நொய்யல் ஆற்றினை முழுவதுமாக நாம் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட  30க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஆறு காவிரி ஆறு. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 5 கோடி மக்களின் குடிநீர் தேவைக்கும் வேளாண்மை தேவைக்கும் காவிரித்தாய் தான் நீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  காவிரியை நாம் தாயாக வணங்குகிறோம். எல்லா ஆறுகளும் நமக்கு தாய் தான். 

பெருமை வாய்ந்த காவேரி ஆற்றில் தமிழ்நாட்டில் இருந்து, மேற்கு பகுதியில் இருந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு அமராவதி ஆறு கிளை ஆறுகளாக கலக்கின்றன. கிழக்குப் பகுதியில் இருந்து திருமேனி முத்தாறு சரபங்கா நதி ஆறு ஆகிய ஆறுகள் காவேரி ஆற்றில் கிளை ஆறுகளாக கலக்கின்றன.  

சேலம் நடுவில் சாக்கடை வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றின் பேர் தான் திருமேணிமுத்தாறு.  சரபங்கா ஆற்றின் நடுவே பெரிய ஊர்கள் ஏதும் இல்லாத காரணத்தினால், அது சாக்கடை அதிகம் இல்லாத நல்ல ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.  

பவாணியை காப்போம் என்று 1999 ஆம் ஆண்டிலே மருத்துவர் அய்யா அவர்கள் மூன்று நாள் 5000 இளைஞர்கள் உடன் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், நாங்கள் எவ்வளவு செய்கிறோமே அதையெல்லாம் வெளியில் சொல்ல தெரியவில்லை. 1998 ஆம் ஆண்டில் பாலாறைக் காக்கவும் மருத்துவர் அய்யா அவர்கள் மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யாலாறுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமனியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. அதன் பிறகு வந்த சேர சோழ பாண்டியர் மன்னர்களும் நொய்யல் ஆற்றுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். மூவேந்தர்களும் சேர்ந்து நீர் மேலாண்மை செய்த ஒரு இடமென்றால் அது நொய்யல் ஆறு தான் என்ற பெருமை உண்டு. 

இத்தகைய வரலாறுகளை எல்லாம் நாம் பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வரலாறுகளை சினிமா வழியில் சொல்லலாம். அப்படி சொன்னால் தான் மக்களுக்கு புரியும். அவ்வாறுதான் நாம் செல்ல வேண்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வர இருக்கிறது. தமிழகத்தில் சினிமாவின் மோகம் அதிகரித்துவிட்டது. சினிமா வழியில் சொன்னால் தான் மக்களுக்கு புரிய வரும். தமிழர்களின் டிஎன்ஏவில் சினிமா ஊறிப் போய்விட்டது.  அதனால் தான் நாங்கள் அரசியலில் மேலே வர கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.  ஏனெனில் நாங்கள் சினிமாவில் இல்லை.  ஆனாலும் எங்களோட நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் சீக்கிரமாக முன்னேற்றுவோம்.

இங்கே எனக்கு முன் பேசிய பழனிச்சாமி அவர்கள், தெலுங்கானாவில் உள்ள 45 ஆயிரம் ஏரிகளை மேம்படுத்தினார்கள் என சொன்னார்கள். ஆந்திராவில் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி காலத்திலே 2005 ஆம் ஆண்டு 80000 கோடி ரூபாய் ஒதுக்கி நீர் மேலாண்மையில் புரட்சி ஏற்படுத்தினார். ஆந்திராவின் வரமான கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளை மேம்படுத்தி அங்குள்ள நீர் நிலைகளை மேம்படுத்தி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்திருந்தார்.  

அதன் பிறகு தற்போது தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 60,000 கோடியை ஒதுக்கி தெலுங்கானாவில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.  நம்ம ஊரில் அந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில் ஒரு லட்சம் கோடி தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழக அரசு ஒதுக்க வேண்டும். 

காலநிலை மாற்றம் பிரச்சனை நமது காலத்தில் பார்க்க மாட்டோம், எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் காலத்தில் தான் பார்ப்போம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நமது காலத்திலேயே பார்க்க வைத்துவிட்டது. அதை தடுக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். எங்கேயாவது கடனை வாங்குங்கள். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து வையுங்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் 42,000 ஏரிகள் இருந்தது தற்போது 37,000 ஏரிகளாக குறைந்து விட்டது. 5000 ஏரிகள் காணவில்லையே. நம்முடன் இங்கே இருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் ஏரிகளை மீட்டெடுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களால் மீட்டுக் கொடுக்கப்படும் ஏரிகள்தான் நம் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லும் சொத்துக்கள். 

150 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் சராசரி வெப்பநிலை 14 °c ஆக இருந்தது. இன்று 15.2°c ஆக உயர்ந்திருக்கிறது. நான் 15.1 °c என நினைத்திருந்த நிலையில் 15.2 °c என்ற அளவில் கிடுகிடு என உயர்ந்திருக்கிறது. 1.2°c தான் உயர்ந்திருக்கிறது. ஆனால் எவ்வளவு பாதிப்புகளை நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். 

உலக அளவில் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் வில்லன் யார் என்று தெரியுமா அமெரிக்கா தான். 22 சதவீத உலக வெப்பம் உயர்வுக்கு காரணம் அமெரிக்கா தான்.  அமெரிக்காவில் கடந்த மாதம் கடுமையான குளிர் ஏற்பட்டது. கனடாவில் கடந்த வருடம் ஒரே நாளில் 52 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்பநிலை உயர்ந்ததில் 1200 பேர் உயிரிழந்தார்கள். கடந்த வருடம் ஐரோப்பாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டு லண்டனில் ரேஷன் முறையில் குடிநீர் வழங்கப்பட்டது. சீனாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் பெங்களூரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது போன்ற இயற்கை சீற்றங்கள் நமது தமிழகத்திலும் விரைவில் நடக்கக்கூடும்.

நமது நீலகிரி அவலாஞ்சியில் வரலாறு காணாத பெருமழை பெய்ததை பார்த்திருப்போம். இதுபோன்று கடுமையான மழை  உள்ளிட்டவைகளை நாம் அடிக்கடி பார்க்க போகிறோம். இதுபோன்ற பிரச்சனைகள் நிறைய வரப்போகிறது. ஐயா பழனிச்சாமி சொன்னது போல, முதலில் பருவமழை என்பது 54 நாட்களாக இருந்தது. பின்னர் 46 நாட்களாக குறைந்தது. நமக்கு இரண்டு பருவமழைகள் வரும். ஒன்று வடக்கிழக்கு பருவ மழை இன்னொன்று தென்மேற்கு பருவமழை. இந்த மழைக்காலத்தில் தான் நம்முடைய ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை வட கிழக்கு பருவமழை தான் அதிகம். தென்மேற்கு பருவ மழை என்பது குறைவுதான். ஆனால் இந்தியா முழுவதும் பார்க்க போனால், 80 சதவீத அளவிற்கு தென்மேற்கு பருவமழையை நம்பி தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி தான் நாம் அதிகமாக உள்ளோம்.

கடைசி 20 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவ மழை கூடுதலாக பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த மழை ஒரே நாளில் பெய்து விடுகிறது. இரண்டு நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து விடுகிறது. அந்த மழையை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இல்லை. நம்முடைய ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போயுள்ளது. ஐந்து நாளில்  பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்தால் அந்த மழையை தேக்கி வைப்பதற்கு உண்டான வசதி நம்மிடம் இல்லை. அந்த மழை அனைத்துமே நேரடியாக கடலுக்கு சென்று விடுகிறது. 

ஆதித்ய கரிகாலன் போன்ற மன்னர்கள் வெட்டிய ஏரிகள், விவரமாக சொல்ல வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் கதையில் வருகின்ற ஆதித்த கரிகாலன் நொய்யல் பகுதியில் வெட்டிய 32 ஏரிகள் என்று சொல்ல வேண்டும். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்கள் இங்கேயே இருந்து ரோம் இத்தாலி பகுதிகளுக்கு வணிகம் செய்தார்கள். அவர்கள் எப்படி வணிகம் செய்தார்கள் என்றால், மலபார் கடற்கரை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை வழியாக வணிகம் செய்தார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் இரு பகுதிகளுக்கும் இடையே மாட்டுவண்டியில் வண்டி வண்டியாக பொருட்கள் வருவதும் போவதுமாக இருக்கும். அப்போது இடையில் இருக்கின்ற நொய்யல் ஆற்றில் இருந்து தான் அவர்களுக்கு தேவையான நீரை குடிநீராக எடுத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு ஏரியாக நிரம்பி ஒன்றன்பின் ஒன்றாக, ஏரிகள் நிரம்பிப் பின்னர் நொய்யல் ஆற்றிலே வந்து கலந்து விடும். இந்த வரலாறு நம் பிள்ளைகளுக்கு தெரியாது. இதனை நாம் தான் எடுத்துக் கூற வேண்டும். 32 அணைகளை கட்டினார்கள், 43 குளங்களை கட்டினார்கள். அதை அனைத்துமே வணிகத்துக்காக செய்தார்கள். ராஜ கேசரி என்று அந்த வழியை சொல்வார்கள். பூம்புகார் முதல் மலபார் கோஸ்ட் வரை உள்ள வணிகப் பாதை அது நம் பெருமை. வெள்ளையர்கள் வந்த பிறகு கூட இந்த ஏரி குளங்களை பாதுகாத்தார்கள். ஆனால் நம் ஆட்கள் வந்த பிறகுதான் அதனை அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

மான்செஸ்டர் ஆப் இந்தியா என்று நாம் சொல்வது கோயம்புத்தூர். அது நமக்கு பெருமையாக இருக்கும். ஆனால் அந்த காலத்தில் இது போன்ற ஒரு பெயரை உருவாக்குவதற்கு என்ன செய்தார்கள்? அந்நேரம் மின்சாரம் கிடையாது நீராவி மூலமாகத்தான் அன்றைய காலத்தில் தொழிற்சாலைகள் இயங்கின. இதற்கு தேவையான மரங்களை வெள்ளியங்கிரி மலையில் இருந்த காடுகளை அழித்து தான் எடுத்தார்கள்.

அப்படி உருவாகியதுதான் கோயம்புத்தூர் என்ற நகரம். அன்று ஆரம்பித்தது இன்று அழிவில் நிற்கிறது. அடுத்த பிரச்சனை செங்கல் சூளை, இங்கே இருக்கின்ற அசோக் கூட செங்கல் சூளையை எதிர்த்ததால் சிறைக்கு சென்றார். அதன் பிறகு நீதிமன்றம் மூலம் இந்த பகுதியில் இருக்கின்ற செங்கல் சூளைகளை மூட உத்தரவு வாங்கியுள்ளோம்.

செங்கல் சூளைகள் எங்கிருந்து வந்தது. அதே வெள்ளியங்கிரி மலையில் இருந்துதான். வெள்ளியங்கிரி மலையில் 7 உச்சிகள் இருக்கும். அது ஒரு புனிதமான மலை. 'தென் கைலாயம்' என்று அந்த வெள்ளியங்கிரி மலையை அழைப்பார்கள். அப்படிப்பட்ட புனிதமான, மூலிகைகள் நிறைந்த மலையில் இன்று ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இந்த மலைப்பகுதியில் ஆங்காங்கே சுனைகள் இருக்கும். இன்று கூட நீங்கள் பார்த்தால் மலை அடிவாரத்தில் நொய்யல் ஆறு நன்றாக இருக்கும். அவ்வளவு சுத்தமான தண்ணீராக இருக்கும். ஆனால் வெள்ளியங்கிரி மலையிலிருந்து 20 கிலோமீட்டர் வந்த பிறகுதான் இந்த பிரச்சனை தொடங்குகிறது. பேரூர் என்ற ஊருக்கு பிறகு தான் இவ்வளவு பிரச்சனையும் தொடங்குகிறது.

கூவம் என்றால் நாம் மூக்கை பிடிப்போம், முகத்தை சுழிப்போம். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும். திருவள்ளூர் அருகே உள்ள கூவம் எனும் கிராமத்திலிருந்து தான் இந்த கூவம் நதி தொடங்குகிறது. அங்கிருந்து சென்னைக்கு 72 கிலோமீட்டர் பயணித்து நேப்பியர் பாலத்தில் முடிகிறது கூவம் நதி. இன்றும் இந்த கூவம் நதியின் முதல் 60 கிலோ மீட்டர் தண்ணீரை குடிக்கலாம், விவசாயம் செய்யலாம். இந்த கூவம் நதி எப்போது சென்னையின் நுழைவாயிலை தொடுகிறதோ அது முதல் சாக்கடையாக மாறுகிறது. அந்த கூவம் நதியை சரி செய்வதற்காக எத்தனையோ அரசுகள், எத்தனையோ ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள். 

அதே போல் தான் நொய்யல் ஆறும் ஆரம்பத்தில் தூய்மையான நீராகத்தான் வருகிறது. நொய்யல் ஆற்றை நம் நான்கு கட்டங்களாக பிரித்து கொள்வோம்.
மலையடிவாரத்தில் இருந்து பேரூர் வரை ஒரு கட்டம், பேரூர் முதல் சாம்பலாபுரம் ஏரி வரை இரண்டாவது கட்டம், சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரை மூன்றாவது கட்டம், ஒரத்தப்பாளையம் அணையில் இருந்து காவிரியில் சேருகின்ற கிராமமான நொய்யல் வரை நான்காவது கட்டம். கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அந்த நொய்யல் கிராமத்தின் பெயர் தான் நொய்யல் ஆற்றுக்கு பெயராக வருகிறது.

இந்த நான்கு கட்டங்களில் முதல் கட்டம் நன்றாக இருக்கிறது. நான்காவது கட்டம் ஓரளவுக்கு பரவாயில்லை. மூன்றாவது கட்டம் தான் மாசுக்களில், கழிவுகளில் 90 சதவீதம் நொய்யல் ஆற்றை கெடுப்பது. இந்த மூன்றாவது கட்டமான சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரையும் உள்ள பகுதி தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? பிரச்சனையை மட்டும் நான் பேசுவதற்காக வரவில்லை. இந்த பிரச்சனைக்கான உண்டான தீர்வையும் சொல்ல வந்திருக்கிறேன். இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன். நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் புகைப்பொருள் லாபியை எதிர்த்து தன்னந்தனியாக போராடினேன். எனக்கு யாருமே அந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவில் புகையிலை லாபி என்பது உலகத்திலேயே மிகப்பெரிய லாபி. அது ஒரு மாஃபியா கும்பல்,

அதனை எதிர்த்து தான் இந்தியாவின் பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தவன் நான். துணிவாக கொண்டு வந்தவன் நான். அதே போல் புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் கொடுக்க வேண்டும் என்ற என்னுடைய  சட்டத்திற்கு சக அமைச்சர்களே எதிர்த்தார்கள். நாடாளுமன்றத்தில் 140 எம்பிக்கள் அதனை எதிர்த்தார்கள். எத்தனையோ முதலமைச்சர்கள் அதனை எதிர்த்தார்கள். அதை பற்றி நான் பொருட்படுத்த கூட இல்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரத்தை கொண்டு வந்தேன். குட்கா லாபி எவ்வளவு பெரிய லாபி தெரியுமா? இந்தியாவில் அதை தடை செய்தவன் நான். எந்த நம்பிக்கை இதை அனைத்தையும் செய்தேன் தெரியுமா? தன்னம்பிக்கையில் தான் செய்தேன். நான் அந்த நம்பிக்கையில் தான் தற்போது நான் கொங்கு பகுதிக்கு வந்திருக்கிறேன்.

காவிரித்தாய் நம்முடைய தாய். நம்முடைய தாயை எப்படி நாம் பார்த்துக் கொள்வோம். அதேபோன்று தான் நாம் நம்முடைய காவிரி தாயையும், நொய்யல் என்ற ஒரு தாயையும் பாதுகாக்க வேண்டும். நான் இங்கே வந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பொதுநலம். இன்னொரு காரணம் அதில் சுயநலமும் இருக்கிறது. பொது நலம் நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற வேண்டும். நொய்யல் தாயை காப்பாற்ற வேண்டும். காவிரி தாயை காப்பாற்ற வேண்டும்.

சுயநலம் என்னவென்றால நொய்யல் ஆறு இங்கு சீர்கெட்டு போகிறது. இந்த ஆற்றுத் தண்ணீர் காவேரியில் கலக்கிறது. இந்த காவிரி நீர் வீராணம் ஏரிக்கு செல்கிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொடுக்கிறார்கள். சென்னையில் டி நகர் பகுதியில் நான் தான் அந்த தண்ணீரை குடிக்கிறேன். எனக்கு அந்த ஒரு சுயநலம் உள்ளது. நீங்கள் இங்கே கெடுக்கின்ற தண்ணியை தான், அங்கே நான் குடிக்கின்றேன். தமிழ்நாட்டில் ஐந்து கோடி பேர் காவிரியை நம்பி இருக்கிறார்கள். காவிரி நதியை பற்றி எனக்கு ஏ டு இஸட் ஓரளவுக்கு தெரியும். மூன்று நாள் 'காவிரியை காப்போம்' என்று ஒகேனக்கல் பிள்ளிகுண்டு ஆரம்பித்து, பூம்புகார் வரை பிரச்சாரம் செய்திருக்கிறேன். அந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் ஐயா தெய்வசிகாமணி அவர்கள் தான்.

வைகை ஆற்றைக் காப்போம் என்று இரண்டு நாள் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு பகுதியாக பிரச்சாரம் செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, மேகமலை என்ற இரண்டு மலை பகுதிதான் வைகை ஆற்றின் நிர்படிப்பு பகுதிகள். வைகை ஆற்றின் கடந்த வரலாற்றை திருப்பி பார்த்தால் பாடல்களும், மன்னர்களும் புகழ்ந்து எழுதியிருப்பார்கள். இன்று வைகை ஆற்றில் தண்ணீர் என்பதே இல்லை. ஏனென்றால் அந்த வெள்ளிமலை, மேகமலை பகுதியில் காட்டை அழித்துவிட்டு தேயிலை தொழிற்சாலைகளை உருவாக்கி விட்டார்கள். ஒன்றரை லட்சம் ஏக்கர் காட்டை அழித்து தேயிலை தொழிற்சாலையாக மாற்றிவிட்டார்கள். அதனால் வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் வருவதில்லை. தற்போது வைகையில் வருகின்ற அந்த கொஞ்சம் தண்ணீர் என்பது முல்லைப் பெரியாற்றிலிருந்து வருகின்ற தண்ணீர் தான். 

வெள்ளிமலை, மேகமலை பகுதியில் புலிகள் சரணாலயத்தை தமிழக அறிவித்துள்ளது. அது எங்களுடைய கோரிக்கை. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு அரசியல் எதிர்ப்புகளும் உள்ளன. புலிகள் சரணாலயமாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டால், காடுகள் வரும், அதன் மூலம் வைகை ஆற்றில் நீர் வரும் என்பது எங்களுடைய திட்டம், எங்களுடைய கோரிக்கை. புலிகள், யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து விட்டதாக செய்திகள் வருகின்றன. நான் சொல்கிறேன்., யானையும், புலியும் உங்க வீட்டுக்கு வரவில்லை. உங்கள் குடியிருப்பு பகுதிக்கு வரவில்லை. நீங்கள் தான் யானையும், புலியும் வசிக்கக்கூடிய ஊரில் வீடு கட்டி இருக்கிறீர்கள். விலங்குகள் அதன் வாழ்விடத்திற்கு வருகிறது. அது வேறு எங்கு செல்ல முடியும். நாம்தான் காடுகளை ஆக்கிரமித்து இருக்கிறோம். இதனை மாற்றி அமைக்க வேண்டும். நாம் இன்னும் காடுகளை வளர்க்க வேண்டும்.

பேரூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் முன்னோர்களுக்கு திதி உள்ளிட்ட காரியங்களை செய்வார்கள். அதேதான் தாமிரபரணி ஆற்றலும் செய்யவார்கள். 'தாமிரபரணியை காப்போம்' என்று இரண்டு நாள் பிரச்சாரம் செய்தேன். பாபநாசம் முதல் புன்னைக்காவல் வரை 170 கிலோமீட்டர் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். 

தாமிரபரணிக்கு தண்ணீர் வரக்கூடிய பொதிகை மலையில் புல்வெளிகள் உண்டு. அந்த புல்வெளிகள் பெய்கின்ற மழையை பூமிக்கு அனுப்பி, ஆண்டு முழுவதும் தாமிரபரணிக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும். அதேபோன்ற புல்வெளி அமைப்பு வெள்ளியங்கிரி மலையிலும் இருந்தது. ஆனால் இப்போது காட்டை அழித்து, அனைத்தையும் அழித்து விட்டார்கள். அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும். 

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றால், அதன் தொடக்கம் வெள்ளியங்கிரி மலையாகத்தான் இருக்கும். அங்கு காடுகளை உருவாக்க வேண்டும். அடுத்ததாக சாம்பலாபுரம் ஏரி முதல் ரத்தபாளையம் அணை வரையும் நொய்யல் ஆறு 90 சதவீதம் சீர்கெட்டு விடுகிறது. உலகத்தில் எங்காவது தண்ணீரை திறந்து விடாதீர்கள் என்று விவசாயிகள் போராடி பார்த்து இருக்கிறீர்களா? இங்கு ஓருத்தப்பாளையம் கீழ் இருக்கின்ற பகுதிகளில் விவசாயிகள் அப்படியான ஒரு போராட்டத்தை தான் நடத்துவார்கள். காரணம் அந்த அளவுக்கு தண்ணீர் அந்த பகுதியில் சீர்கெட்டு போயிருக்கும். ஆனால் பருவமழை காலத்தில் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து சென்றுவிடும்.

நாம் குடிக்கின்ற நீரில் சாதாரணமாக 50 முதல் 150 அளவு டிடிஎஸ் இருக்கும். டிடிஎஸ் என்றல் டோட்டல் டிசால் சால்ஸ். நாம் குளிக்கின்ற, பாத்திரம் கழுவுகின்ற நீர்களில் சுமாராக ஒரு 500 முதல் 1200 டிடிஎஸ் இருக்கும். விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற நீர் சுமார் 2000 முதல் 2500 வரை டிடிஎஸ் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஓருத்தப்பாளையம் அணையில் இருக்கின்ற நீரில் உள்ள டிடிஎஸ் எவ்வளவு தெரியுமா? 6000 முதல் 17,000 வரை டிடிஎஸ் உள்ளது. அந்த நீரில் என்னென்ன ரசாயனங்கள் இருக்குமோ., அனைத்துமே அதில் உள்ளது. அதற்கு காரணம் கோயமுத்தூர் வடக்கு பகுதியில் இருந்து வருகின்ற கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இங்கிருக்கும் பகுதிகளில் வருகின்ற திடக்கழிவுகள் தான். இந்த திடக்கழிவுகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு இங்கிருக்கின்ற வனிதா மோகன் உள்ளிட்டவர்கள் எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன். என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் ஒரே ஒரு கையெழுத்தை போட்டு இதற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்னால். ஆனால், அதிகாரம் என்னிடம் இல்லை. ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால், நிச்சயமாக இது நடக்கும். நடக்க வைக்க வேண்டும். இப்போது நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க நான் வருகிறேன். என்னை பார்த்து இன்னொரு அரசியல் கட்சி தலைவர் நாங்களும் 'நொய்யல் ஆற்றைக் காப்போம்' என்று வருவார், வருவார்கள், வரவேண்டும். அதுதான் என் நோக்கம்.

அவர்களைப் பார்த்து இன்னொரு அரசியல் கட்சித் தலைவர் வருவார். அன்புமணி எங்கிருந்தோ வந்து, கொங்கு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார். நாம் கொங்கு பகுதியில் இருக்கிறோம். நாம் இந்த நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்று களமிறங்க வேண்டும் என்று அவர்களும் களம் இறங்குவார்கள். வரட்டும், வரவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். இது அனைத்துமே நொய்யல் ஆற்றை காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை தான். தொடக்க முயற்சி தான்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி நான்கு முறை நானும், மருத்துவர் அய்யா அவர்களும் அங்கே சென்று போராடி இருக்கிறோம். இது அவசியமான ஒன்று. தற்போது அரசு செய்கிறது. ஆனால் அந்த நடைமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்திக்கடவு அருகே பில்லூர் என்ற பகுதி இருக்கிறது. அங்கிருந்துதான் தண்ணீரை கொண்டு வந்திருக்க வேண்டும். அதற்கு 3500 கோடி ரூபாயை செலவு செய்திருக்க வேண்டும். ஆனால், வேறு விதமாக காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து நீர் கொண்டு வந்து, நீரேற்றும் முறை மூலமாக செய்து உள்ளார்கள். இது சில நேரங்களில் தண்ணீர் வரும். சில நேரங்களில் வராது. அரசின் இந்த திட்டம் ஒரு அரைகுறையான திட்டமாகத்தான் இருக்கிறது. 1500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆனால் அது முழுமையாக இல்லை. ஐயா தெய்வசிகாமணி அவர்களுக்கு தெரியும். அதில் என்ன பிரச்சனை என்பது முழுமையாக அவருக்கு தான் தெரியும். 

தொடர்ந்து நாங்கள் போராடி, போராடி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 95% முடிந்துள்ளது. இன்னும் ஒரு ஐந்து சதவீதம் தான் உள்ளது. இது ஒரு சாத்தியமான  எங்களின் முயற்சி. நாம் முடியும் என்று நினைத்தால் முடியும். முதன் முதலில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அறிவித்தது காமராஜர் காலத்தில். அன்று அந்த திட்டத்தின் மதிப்பு 19 கோடி ரூபாய் தான். இன்று 1500 கோடி ரூபாய். அதுவும் பாதி மட்டும்தான். ஆனால் பரவாயில்லை. எத்தனை கோடியானாலும் அந்தத் திட்டத்திற்கு மிகையாகாது. ஒரு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒரு திட்டம் எதுவென்றால் நீர் மேலாண்மை தான். இது இல்லை என்றால் வாழ்க்கையே கிடையாது. நமக்கு எதிர்காலமும் கிடையாது. 

அந்த நம்பிக்கையில் தான் இங்கு நான் வந்திருக்கிறேன். நான் காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னது 2015 இல்.  காவேரி டெல்டா பகுதி ஒரு சமவெளி பகுதி. இது போன்ற ஒரு பகுதி இந்தியாவிலேயே கிடையாது. இந்த காவிரி டெல்டா பகுதியை ஏன் பாதுகாக்க கூடாது. இதற்காக ஒரு சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது என்று நான் நினைத்தேன். வனங்களை பாதுகாப்பதற்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதேபோல இந்த டெல்டா பகுதியை பாதுகாக்க ஏன் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது என்று எனக்கு ஒரு யோசனை வந்தது. பிறகு அதற்க்கு ஒரு வடிவம் கொண்டு வந்து, அழுத்தம் கொடுத்து, முதன் முதலில் தேர்தல் அறிக்கையில் கொடுத்தேன். 

தொடர்ந்து டெல்டா பகுதியில் கிராம கிராமமாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து, நம்மளுடைய டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும், சோறு போடுகின்ற பொன்னான இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தேன். போராட்டம் செய்தேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம் 10 முறை சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றத்தில் பேசினேன். பிறகு சட்டம் வந்தது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமாக கொண்டு வந்தார். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். அந்த காவிரி வேளாண் மண்டலம் இன்று பாதுகாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று. அதேபோன்று நாம் நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம். இந்த கோஷம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

கோயமுத்தூரில் இருந்து வருகின்ற திடக்கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. இவை இரண்டும் தான் அழிக்கின்ற மிகப்பெரிய கழிவுகள். அதற்கு பின்னர் இன்னும் மோசமான நிலை உருவாகிறது. திருப்பூர் பகுதியில் சென்றால் சாய கழிவுகள், சலவை கழிவுகள் அதிகமாக உள்ளது. இது மிகவும் மோசமான ஒரு கழிவுகள். இதனை எல்லாம் நாம் தடுத்து நிறுத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வோம் என்பது தான் முக்கியமானது.

அண்மையில் மத்திய அரசு 19 ஆயிரம் கோடி ரூபாயில் இந்தியாவில் உள்ள ஆறுகளை புதுப்பிக்க உள்ளதாக ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. 19 ஆயிரம் கோடியில் இந்தியாவில் உள்ள ஆறுகளை புதுப்பித்து விட முடியுமா? முடியாது, அலங்காரம் வேண்டுமென்றால் செய்யலாம். கரை ஓரம் மரங்கள் நடலாம். அதைத்தான் செய்ய முடியும். 
இந்த திட்டத்தின் படி காவேரி ஆற்றுக்கு 3060 கோடி அறிவித்துள்ளார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்தபோது, மத்திய அரசு திட்டம் ஒன்றை கொடுத்துள்ளது. காவிரியை மறு கட்டமைப்பு செய்ய, காவிரியை மீட்டெடுக்க 12,000 கோடி ரூபாய் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். அந்த 12000 கோடி ரூபாயில் மேட்டூர் முதல் திருச்சி வரை 1900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், திருச்சியில் இருந்து மீதமுள்ள பகுதிக்கு மீதமுள்ள ரூபாயை ஒதுக்கி உள்ளார்கள். ஆனால் இந்த திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. 

நொய்யல் ஆற்றை காப்பாற்றுவது என்பது அரசு தான் செய்ய வேண்டும்.  அரசை நாம் அனைவரும் இணைந்து செய்ய வைப்போம். நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும். அப்படி நொய்யல் ஆற்றை மீட்க அரசு நிதி ஒதுக்கினால், அந்த நிதியை அரசே செலவு செய்யக்கூடாது. மேடையில் உள்ள இவர்கள்தான் நிதியை செலவு செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் அரசின் திட்டத்திற்கு தலைவராக நம்மளுடைய சகோதரி வனிதா மோகனை கூட போட்டு விடலாம். ஏனென்றால், வனிதா மோகனை பொருத்தவரை, 'நாம் இந்த சமூகத்தால் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி செய்ய வேண்டும். இந்த சமூகத்திற்கு பிரச்சனை என்றால் நாம் முதல் ஆளாக போய் நிற்க வேண்டும்' என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நான் மீண்டும் ஒருமுறை சொல்வது என்னவென்றால், இந்த தலைமுறையால் மட்டுமே இதனை செய்ய முடியும். நம் தலைமுறையால் மட்டுமே இதை செய்ய முடியும். அடுத்த தலைமுறையால் இதை செய்ய முடியுமா? என்றால், அவர்களால் அது முடியாது. அது அவர்களுக்கு மிகமிக காலதாமதமான நடவடிக்கையாக இருக்கும். அவர்கள் காலத்தில் அது முடிந்து போன ஒன்றாகவே இருக்கும். அதற்காகத்தான் நான் அவசரப்பட்டு கொண்டிருக்கிறேன். வேகமாக அனைவரும் ஒன்றாக வாருங்கள், நாம் செய்து முடிப்போம் என்று அவசரப்பட்டு கொண்டிருக்கிறேன்.

உலகின் பல நாடுகளுக்கு நான் சென்று இருக்கிறேன். பல நாடுகளின் அழிவுகளையும் பார்த்து இருக்கிறேன். அழிவுக்கு ஒரு முழுமையான உதாரணம் நைஜீரியா நாடு தான். அந்நாட்டில் நைஜீரி நதி ஒன்று உள்ளது. அந்த நதி காவிரியை போன்ற அங்கு ஒரு டெல்டா பகுதியும் இருந்தது. அந்த பகுதியில் எண்ணெய் வளத்தை கண்டுபிடித்தார்கள். 

எண்ணெய் வளத்தை கண்டுபிடித்த உடன், அந்நாட்டவர்கள் நாம் பெரிய பணக்காரர்களாகிவிடலாம், நம் நாடு பெரிய நாடாக மாறிவிடும் என்று எண்ணி, நான்கு நிறுவனங்களுக்கு எண்ணெய் வளத்தை எடுக்க அனுமதி கொடுத்தது. பிறகு எண்ணெய் வளத்தை எடுப்பதற்காக நிலத்தை பாழாக்கி, அங்கு இருக்கின்ற விவசாயிகளை அகதிகளாக விரட்டி அடித்ததன் காரணமாக அந்த நாட்டில் சிவில் வார் உண்டானது. 

எனவே நம்மிடம் இருக்கின்ற வளங்களை நாம் ஒவ்வொன்றாக பாதுகாக்க வேண்டும். நாம் சொன்னது போன்ற நொய்யல் ஆற்றின் நான்கு பகுதிகளை, பகுதி பகுதியாக சரி செய்ய வேண்டும். முக்கியமாக நொய்யல் ஆற்றில் கலக்கின்ற கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதில், தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் அது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. அரசும் அதற்காக நிதி ஒதுக்கி சுத்திகரிக்கிறோம் என்கிறார்கள். அந்த சுத்திகரிப்பு முறையால் உருவாகும் கழிவுகளை மீண்டும் நொய்யல் ஆற்று கரையிலேயே போட்டு விடுகிறார்கள். இப்படி தான் இந்த சுத்திகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கொங்கு பகுதி மிக மிக விழிப்புணர்வு உள்ள ஒரு பகுதி. ஒரு செய்தியை நாம் சொன்னால் அது உடனடியாக அனைவரிடமும் சென்றடையும். மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதை நான் பெருமையாக தான் சொல்கிறேன். தமிழகத்தில் கொங்கு பகுதி போன்ற ஒரு பகுதி எங்குமே கிடையாது. விழிப்புணர்வும், ஆர்வமும் கொண்ட மக்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
நொய்யல் ஆற்றின் நான்காவது பகுதியில் கிழக்கு பவானி திட்டத்தின் கீழ் தண்ணீர் வந்து இணைகிறது. இதன் காரணமாக அந்த நீர் ஓரளவுக்கு சுத்தம் அடைந்து, தெளிவடைந்து காவிரியில் கலக்கிறது. 
நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப் பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த பிரச்சனையை நான் இத்தோடு விட போறது இல்லை. நான் ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால், அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டேன். தர்மபுரியில் காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று களம் இறங்கினேன். தருமபுரி மாவட்டத்தின் மேற்கு கரையில் காவிரி ஆறு ஓடுகிறது, வடக்கு கரையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய ஆறுகளில் இரண்டு ஆறுகள் தர்மபுரி மாவட்டத்தில் ஓடுகிறது. ஆனால் தர்மபுரியில் குடிப்பதற்கு சரியான குடிநீர் இல்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? ஒரு வழியாக அங்கு காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று. நடைப்பயணம், போராட்டம், ஆர்பாட்டம், 10 லட்சம் கையெழுத்து என அனைத்தும் செய்து, இப்போதுதான் அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் ஒரு தொடக்கம் தான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனவே இப்போது இருக்கின்ற அரசிடம் நாம் நொய்யல் ஆற்றை பாதுகாக்க, மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வைக்க வேண்டும். மத்திய, அரசும் மாநில அரசும் இணைந்து இந்த நொய்யல் ஆற்றை பாதுகாக்க முன்வர வேண்டும். நிச்சயம் செய்ய வேண்டும். நாம் இதனை நாம் இந்திய நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செய்து காட்டுவோம். இது நாளையே செய்து முடிக்க கூடிய காரியமல்ல. சுமார் 20 வருடங்கள் செய்யக்கூடிய ஒரு திட்டம். இப்போது கழிவுகளை சுத்திகரித்து, நொய்யல் ஆற்று நீரை தூய்மைப்படுத்த முடியும். 

விவசாயிகளையும், பொது மக்களையும், அதிக அளவில் இளைஞர்களையும் இந்த திட்டத்தில் பங்கு பெற வேண்டும். இங்கு இருக்கின்ற மணிகண்டன் போன்ற ஆர்வமான இளைஞர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தந்த பகுதியில் சென்று மரங்கள் நடுவது, குளங்களை தூர் வாருவது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதனை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இது எனக்கு பெருமையாக உள்ளது. நான் உங்களோடு இருக்கிறேன். பசுமைத் தாயகம் சார்பிலும் சரி, மற்ற அரசியல் சார்பிலும் சரி, எந்த வகையிலும் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருப்போம்.

நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப் பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த பிரச்சனையை நான் இத்தோடு விட போறது இல்லை. நான் ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால், அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டேன். தர்மபுரியில் காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று களம் இறங்கினேன். தருமபுரி மாவட்டத்தின் மேற்கு கரையில் காவிரி ஆறு ஓடுகிறது, வடக்கு கரையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய ஆறுகளில் இரண்டு ஆறுகள் தர்மபுரி மாவட்டத்தில் ஓடுகிறது. ஆனால் தர்மபுரியில் குடிப்பதற்கு சரியான குடிநீர் இல்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? ஒரு வழியாக அங்கு காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று. நடைப்பயணம், போராட்டம், ஆர்பாட்டம், 10 லட்சம் கையெழுத்து என அனைத்தும் செய்து, இப்போதுதான் அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் ஒரு தொடக்கம் தான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனவே இப்போது இருக்கின்ற அரசிடம் நாம் நொய்யல் ஆற்றை பாதுகாக்க, மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்ய வைக்க வேண்டும். மத்திய, அரசும் மாநில அரசும் இணைந்து இந்த நொய்யல் ஆற்றை பாதுகாக்க முன்வர வேண்டும். நிச்சயம் செய்ய வேண்டும். நாம் இதனை நாம் இந்திய நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செய்து காட்டுவோம். இது நாளையே செய்து முடிக்க கூடிய காரியமல்ல. சுமார் 20 வருடங்கள் செய்யக்கூடிய ஒரு திட்டம். இப்போது கழிவுகளை சுத்திகரித்து, நொய்யல் ஆற்று நீரை தூய்மைப்படுத்த முடியும். 

விவசாயிகளையும், பொது மக்களையும், அதிக அளவில் இளைஞர்களையும் இந்த திட்டத்தில் பங்கு பெற வேண்டும். இங்கு இருக்கின்ற மணிகண்டன் போன்ற ஆர்வமான இளைஞர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தந்த பகுதியில் சென்று மரங்கள் நடுவது, குளங்களை தூர் வாருவது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதனை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இது எனக்கு பெருமையாக உள்ளது. நான் உங்களோடு இருக்கிறேன். பசுமைத் தாயகம் சார்பிலும் சரி, மற்ற அரசியல் சார்பிலும் சரி, எந்த வகையிலும் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருப்போம்.

நான் மீண்டும் சொல்வதெல்லாம் 'கொங்கு செழிக்கட்டும்', 'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' என்ற அந்த வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. கொங்கு செழிக்க  வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். கொங்கு மண்டலத்தின் இதய பகுதியே நொய்யல் ஆறு தான். அதை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் "சேவ் ரிவர் நொய்யல் கேம்ப்" என்பதெல்லாம் கிடையாது. காப்பாற்றுவது எல்லாம் முடிந்துவிட்டது. நாம் மீட்டெடுக்க வேண்டியது தான் இப்போது நம்முடைய நடவடிக்கையாக இருக்க வேண்டும். நிச்சயமாக நாம் அதை செய்வோம். அதற்கு இந்த நிகழ்ச்சி முதல் கட்டம்.

இதுகுறித்து அனைவரும் பிரச்சாரம் செய்யுங்கள், விழிப்புணர் ஏற்படுத்துங்கள், இங்கிருக்கின்ற இளைஞர்கள் தான் இதனை செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஒரு குழுவாக சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து, அழுத்தம் கொடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தீர்வு காண செய்யலாம்.

நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும், இந்த கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு வருகை தந்திருக்கின்ற மேடையில் உள்ள பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பசுமை தாயகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களும் சிரமப்பட்டு தான் இதனை நடத்தி உள்ளார்கள். அசோக், ராஜ் உள்ளிட்டவர்கள் தூங்கி 10 நாட்கள் மேல் ஆகிறது. இதனை நாங்கள் ஆர்வத்தோடு தான் செய்து கொண்டிருக்கிறோம். இது ஒரு தொடக்க நிகழ்ச்சி, கூட்டம் மட்டும் தான். அடுத்த கட்ட கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி நிச்சயமாக இந்த நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்.  நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என அன்புமணி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Noiyyal River issue Pasumai Thayakam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->