வெள்ளையர்கள் கூட அதை செய்யவில்லை., ஆனா நம்ம ஆளுங்க வந்து தான்.., அன்புமணி இராமதாஸ் வேதனை! - Seithipunal
Seithipunal


"நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்" என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத் தொண்டு அமைப்புகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பசுமை தாயகத்தின் முன்னாள் தலைவரும், பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். 

அவர் பேசியதாவது, “பசுமை தாயகத்தின் தலைவராக ஆறாண்டு காலம் பணியாற்றியிருக்கிறேன். அந்த ஆறு ஆண்டு காலம் எனக்கு மிகவும் பிடித்தமான காலம். அதன் பிறகு தான் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது.  பசுமைத்தாயகம் அமைப்பு மருத்துவர் அய்யா அவர்களால் 1996 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவர் அய்யா அவர்கள் தீர்க்கதரிசி, அவர் அடிப்படையில் ஒரு விவசாயி. எதிர்காலத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்து இதுபோன்ற பல்வேறு அமைப்புகளை தொடங்கினார். 

எனக்கு சிறுவயதில் இருந்து இயற்கை மிக பிடித்தமானது. பசுமை தாயகத்தில் இணைந்த பிறகு தமிழ்நாடு முழுவதுமாக சுற்றிப் பார்த்து வருகிறேன். நொய்யல் ஆற்றினை முழுவதுமாக நாம் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட  30க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஆறு காவிரி ஆறு. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களில் 5 கோடி மக்களின் குடிநீர் தேவைக்கும் வேளாண்மை தேவைக்கும் காவிரித்தாய் தான் நீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  காவிரியை நாம் தாயாக வணங்குகிறோம். எல்லா ஆறுகளும் நமக்கு தாய் தான். 

பெருமை வாய்ந்த காவேரி ஆற்றில் தமிழ்நாட்டில் இருந்து, மேற்கு பகுதியில் இருந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு அமராவதி ஆறு கிளை ஆறுகளாக கலக்கின்றன. கிழக்குப் பகுதியில் இருந்து திருமேனி முத்தாறு சரபங்கா நதி ஆறு ஆகிய ஆறுகள் காவேரி ஆற்றில் கிளை ஆறுகளாக கலக்கின்றன.  

சேலம் நடுவில் சாக்கடை வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றின் பேர் தான் திருமேணிமுத்தாறு.  சரபங்கா ஆற்றின் நடுவே பெரிய ஊர்கள் ஏதும் இல்லாத காரணத்தினால், அது சாக்கடை அதிகம் இல்லாத நல்ல ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.  

பவாணியை காப்போம் என்று 1999 ஆம் ஆண்டிலே மருத்துவர் அய்யா அவர்கள் மூன்று நாள் 5000 இளைஞர்கள் உடன் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், நாங்கள் எவ்வளவு செய்கிறோமே அதையெல்லாம் வெளியில் சொல்ல தெரியவில்லை. 1998 ஆம் ஆண்டில் பாலாறைக் காக்கவும் மருத்துவர் அய்யா அவர்கள் மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யாலாறுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமனியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. அதன் பிறகு வந்த சேர சோழ பாண்டியர் மன்னர்களும் நொய்யல் ஆற்றுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். மூவேந்தர்களும் சேர்ந்து நீர் மேலாண்மை செய்த ஒரு இடமென்றால் அது நொய்யல் ஆறு தான் என்ற பெருமை உண்டு. 

இத்தகைய வரலாறுகளை எல்லாம் நாம் பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வரலாறுகளை சினிமா வழியில் சொல்லலாம். அப்படி சொன்னால் தான் மக்களுக்கு புரியும். அவ்வாறுதான் நாம் செல்ல வேண்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வர இருக்கிறது. தமிழகத்தில் சினிமாவின் மோகம் அதிகரித்துவிட்டது. சினிமா வழியில் சொன்னால் தான் மக்களுக்கு புரிய வரும். தமிழர்களின் டிஎன்ஏவில் சினிமா ஊறிப் போய்விட்டது.  அதனால் தான் நாங்கள் அரசியலில் மேலே வர கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.  ஏனெனில் நாங்கள் சினிமாவில் இல்லை.  ஆனாலும் எங்களோட நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் சீக்கிரமாக முன்னேற்றுவோம்.

இங்கே எனக்கு முன் பேசிய பழனிச்சாமி அவர்கள், தெலுங்கானாவில் உள்ள 45 ஆயிரம் ஏரிகளை மேம்படுத்தினார்கள் என சொன்னார்கள். ஆந்திராவில் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி காலத்திலே 2005 ஆம் ஆண்டு 80000 கோடி ரூபாய் ஒதுக்கி நீர் மேலாண்மையில் புரட்சி ஏற்படுத்தினார். ஆந்திராவின் வரமான கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளை மேம்படுத்தி அங்குள்ள நீர் நிலைகளை மேம்படுத்தி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்திருந்தார்.  

அதன் பிறகு தற்போது தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 60,000 கோடியை ஒதுக்கி தெலுங்கானாவில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.  நம்ம ஊரில் அந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில் ஒரு லட்சம் கோடி தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழக அரசு ஒதுக்க வேண்டும். 

காலநிலை மாற்றம் பிரச்சனை நமது காலத்தில் பார்க்க மாட்டோம், எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் காலத்தில் தான் பார்ப்போம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நமது காலத்திலேயே பார்க்க வைத்துவிட்டது. அதை தடுக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். எங்கேயாவது கடனை வாங்குங்கள். 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து வையுங்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் 42,000 ஏரிகள் இருந்தது தற்போது 37,000 ஏரிகளாக குறைந்து விட்டது. 5000 ஏரிகள் காணவில்லையே. நம்முடன் இங்கே இருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் ஏரிகளை மீட்டெடுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களால் மீட்டுக் கொடுக்கப்படும் ஏரிகள்தான் நம் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லும் சொத்துக்கள். 

150 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் சராசரி வெப்பநிலை 14 °c ஆக இருந்தது. இன்று 15.2°c ஆக உயர்ந்திருக்கிறது. நான் 15.1 °c என நினைத்திருந்த நிலையில் 15.2 °c என்ற அளவில் கிடுகிடு என உயர்ந்திருக்கிறது. 1.2°c தான் உயர்ந்திருக்கிறது. ஆனால் எவ்வளவு பாதிப்புகளை நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். 

உலக அளவில் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் வில்லன் யார் என்று தெரியுமா அமெரிக்கா தான். 22 சதவீத உலக வெப்பம் உயர்வுக்கு காரணம் அமெரிக்கா தான்.  அமெரிக்காவில் கடந்த மாதம் கடுமையான குளிர் ஏற்பட்டது. கனடாவில் கடந்த வருடம் ஒரே நாளில் 52 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்பநிலை உயர்ந்ததில் 1200 பேர் உயிரிழந்தார்கள். கடந்த வருடம் ஐரோப்பாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டு லண்டனில் ரேஷன் முறையில் குடிநீர் வழங்கப்பட்டது. சீனாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் பெங்களூரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது போன்ற இயற்கை சீற்றங்கள் நமது தமிழகத்திலும் விரைவில் நடக்கக்கூடும்.

நமது நீலகிரி அவலாஞ்சியில் வரலாறு காணாத பெருமழை பெய்ததை பார்த்திருப்போம். இதுபோன்று கடுமையான மழை  உள்ளிட்டவைகளை நாம் அடிக்கடி பார்க்க போகிறோம். இதுபோன்ற பிரச்சனைகள் நிறைய வரப்போகிறது. ஐயா பழனிச்சாமி சொன்னது போல, முதலில் பருவமழை என்பது 54 நாட்களாக இருந்தது. பின்னர் 46 நாட்களாக குறைந்தது. நமக்கு இரண்டு பருவமழைகள் வரும். ஒன்று வடக்கிழக்கு பருவ மழை இன்னொன்று தென்மேற்கு பருவமழை. இந்த மழைக்காலத்தில் தான் நம்முடைய ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை வட கிழக்கு பருவமழை தான் அதிகம். தென்மேற்கு பருவ மழை என்பது குறைவுதான். ஆனால் இந்தியா முழுவதும் பார்க்க போனால், 80 சதவீத அளவிற்கு தென்மேற்கு பருவமழையை நம்பி தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி தான் நாம் அதிகமாக உள்ளோம்.

கடைசி 20 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவ மழை கூடுதலாக பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த மழை ஒரே நாளில் பெய்து விடுகிறது. இரண்டு நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து விடுகிறது. அந்த மழையை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இல்லை. நம்முடைய ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போயுள்ளது. ஐந்து நாளில்  பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்தால் அந்த மழையை தேக்கி வைப்பதற்கு உண்டான வசதி நம்மிடம் இல்லை. அந்த மழை அனைத்துமே நேரடியாக கடலுக்கு சென்று விடுகிறது. 

ஆதித்ய கரிகாலன் போன்ற மன்னர்கள் வெட்டிய ஏரிகள், விவரமாக சொல்ல வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் கதையில் வருகின்ற ஆதித்த கரிகாலன் நொய்யல் பகுதியில் வெட்டிய 32 ஏரிகள் என்று சொல்ல வேண்டும். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்கள் இங்கேயே இருந்து ரோம் இத்தாலி பகுதிகளுக்கு வணிகம் செய்தார்கள். 

அவர்கள் எப்படி வணிகம் செய்தார்கள் என்றால், மலபார் கடற்கரை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை வழியாக வணிகம் செய்தார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் இரு பகுதிகளுக்கும் இடையே மாட்டுவண்டியில் வண்டி வண்டியாக பொருட்கள் வருவதும் போவதுமாக இருக்கும். அப்போது இடையில் இருக்கின்ற நொய்யல் ஆற்றில் இருந்து தான் அவர்களுக்கு தேவையான நீரை குடிநீராக எடுத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு ஏரியாக நிரம்பி ஒன்றன்பின் ஒன்றாக, ஏரிகள் நிரம்பிப் பின்னர் நொய்யல் ஆற்றிலே வந்து கலந்து விடும். இந்த வரலாறு நம் பிள்ளைகளுக்கு தெரியாது. இதனை நாம் தான் எடுத்துக் கூற வேண்டும். 32 அணைகளை கட்டினார்கள், 43 குளங்களை கட்டினார்கள். அதை அனைத்துமே வணிகத்துக்காக செய்தார்கள். ராஜ கேசரி என்று அந்த வழியை சொல்வார்கள். பூம்புகார் முதல் மலபார் கோஸ்ட் வரை உள்ள வணிகப் பாதை அது நம் பெருமை. வெள்ளையர்கள் வந்த பிறகு கூட இந்த ஏரி குளங்களை பாதுகாத்தார்கள். ஆனால் நம் ஆட்கள் வந்த பிறகுதான் அதனை அழிக்க ஆரம்பித்து விட்டார்கள்" என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about TN People 2023 pasumai thayakam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->