இப்படிப்பட்ட ஏமாற்றத்தை நீங்களே அளிக்கலாமா?..! வருத்தத்தில் மரு. இராமதாசு.!!
dr ramadoss feeling about chennai high court cancel govt name change
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நியாயமான இந்த கோரிக்கையைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் என்பது தான் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவற்றில் முதல் கோரிக்கையை வலியுறுத்தி 2006&ஆம் ஆண்டு திசம்பர் 6&ஆம் தேதியும், இரண்டாவது கோரிக்கையை வலியுறுத்தி 2016&ஆம் ஆண்டு ஜூலை 31&ஆம் தேதியும் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல வழக்கறிஞர்கள் அமைப்புகளும் இதே கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பா.ம.க.வும் இக்கோரிக்கைகளை பல தருணங்களில் முன் மொழிந்தும், வழி மொழிந்தும் வந்திருக்கிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் வழக்கறிஞர் அமைப்புகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்த மத்திய சட்ட அமைச்சகம் அது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை கேட்டதாக தெரிகிறது. அதுகுறித்து முடிவெடுப்பதற்காக அண்மையில் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவின் மூத்த நீதிமன்றங்களில் ஒன்று என்பதாலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவது சரியானதாக இருக்காது என்பதாலும் இப்படி ஒரு முடிவை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது நடைமுறையை பிரதிபலிப்பதாக இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக அதன் பெயரை மாற்றக்கூடாது என்பது ஏற்க முடியாத வாதமாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட போது தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லை. இன்றைய ஆந்திரா, கேரளம், கருநாடகம் ஆகியவற்றின் சில பகுதிகளும், இப்போதுள்ள ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்த மெட்ராஸ் மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. அதனால் தான் அப்போது உயர்நீதிமன்றத்திற்கு சென்னை உச்சநீதிமன்றம் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட போது சென்னை உச்சநீதிமன்றத்தின் பெயர் சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில் எந்தத் தவறும் இல்லை. அது தான் நடைமுறை யதார்த்தமாகும்.
பின்னாளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆளுகையில் இருந்த பல பகுதிகள் அண்டை மாநிலங்களின் உயர்நீதிமன்ற ஆளுகைக்கு மாற்றப்பட்டன. மேலும் சென்னை மாகாணத்தின் பெயரும் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. இந்தியாவில் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட போது சென்னை உச்சநீதிமன்றத்தின் பெயர் எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றப்பட்டதோ, அதேபோல், இப்போது நடைமுறை யதார்த்தத்திற்கு ஏற்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வது தான் சரியாகும்; நியாயமாகும்.
இந்த நியாயங்களின் அடிப்படையில் தான் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் பெயர் மாற்றத்தை ஆதரித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த நியாயமான கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு நிராகரித்தது தவறு ஆகும்.
உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவது, வழக்காடு மொழியை மாற்றுவது ஆகியவை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கருத்துகளைக் கேட்கத் தேவையில்லை என்றும், மத்திய அரசே நேரடியாக முடிவெடுக்கலாம் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே கூறியுள்ளது. எனவே, உயர்நீதிமன்ற முழு அமர்வின் முடிவை பொருட்படுத்தாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றுவதற்கான சட்டத்திருத்த முன்வரைவை மத்திய அரசு தயாரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
English Summary
dr ramadoss feeling about chennai high court cancel govt name change