இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பசுமைத் தாயகம் உருவான வரலாறு குறித்து, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், "உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக இப்போது உருவெடுத்திருப்பது காலநிலை மாற்றம் தான். இதற்கு காரணம் மனிதன் தனது சுயநலத்திற்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது தான். சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுப்பதன் மூலம் தான் காலநிலை மாற்றத்தையும், புவி வெப்பமயமாதலையும் கட்டுப்படுத்த முடியும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு இப்போது தான் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடி வருகிறேன். அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் பசுமைத் தாயகம் என்ற அமைப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் பசுமைத் தாயகம் அமைப்பு தொடங்கப்பட்டது. 

1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் புவியைக் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தான் பசுமைத்தாயகம் தொடங்கப்பட்டது.

அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் நாள் பசுமைத் தாயகம் நாளாக கடைபிடிகப்பட்டு வருகிறது. பசுமைத் தாயகம் நாளில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. கடந்த 26 ஆண்டுகளில் இதுவரை 40 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பசுமைத் தாயகம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  கல்பாக்கத்தில் அணு உலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தினோம். வேலூரில் தோல் ஆலை மாசுபாட்டுக்கு எதிரான கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தினோம். கடலூரில் இரசாயன தொழிற்சாலை மாசுபாடுகளுக்கு எதிராக உயிர்க்காக்கும் பேரணிகளை நடத்தினோம். 

மேட்டுப்பாளையம் தொடங்கி ஈரோடு வரை 'பவானி ஆற்றைக் காப்போம்' என பவானி ஆற்று மாசுபாட்டுக்கு எதிராக நீண்ட மிதிவண்டி பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன். வாணியம்பாடி முதல் வாலாஜா வரை 'பாலாற்றை காப்போம்' என தோல் தொழிற்சாலை மாசுபாட்டுக்கு எதிராக நீண்ட மிதிவண்டி பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன். ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் வீதம்  3 நாட்களுக்கு 120 கி.மீ தொலைவுக்கு மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

நீர்வளம் காக்க மிகப்பெரிய இயக்கத்தை மேற்கொண்ட நான், சென்னையில் தேசிய நீர்வள மேலாண்மை கருத்தரங்கத்தையும் நடத்தினேன். தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நானே மண் சுமந்து தூர்வாரினேன். வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டம் ஆக்கப்பட்டதை கண்டித்து 'தோல் ஆலை மாசுபாட்டுக்கு எதிரான தேசிய கருத்தரங்கம்' நடத்தினேன். தோல் ஆலைக் கழிவுகள் பாலாற்றில் கலப்பதை தடுக்கும் தடுப்புச்சுவர் போராட்டத்தையும் மக்களைத் திரட்டி நடத்தினேன்.

தேசிய அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சட்டப்போராட்டங்களுக்கும் இந்த பிரச்சாரங்கள் வலுசேர்த்தன. வேலூர் தோல் ஆலை மாசுபாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் - இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சட்டச்செயல்பாடுகளின் தொடக்கமாக அமைந்தது. 

1992 ரியோ புவி உச்சி மாநாடு முன்வைத்த நீடித்த வளர்ச்சி, மாசுபடுத்தியவரே பொறுப்பேற்றல், முன்னெச்சரிக்கை கோட்பாடு ஆகியன வேலூர் தோல் ஆலை வழக்கின் மூலமாகவே இந்தியா முழுவதும் செயலாக்கப்பட்டது.

என்னைப் பொறுத்தவரை பசுமைத் தாயகம் என்பது மிகவும் பயனுள்ள முயற்சி. சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பசுமைத் தாயகம் அமைப்பின் பணிகள் என்னென்றும் தொடரும். இந்த உன்னதமான பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் என்னுடன் துணை நிற்க வேண்டும். அனைவரும் தங்களால் முடிந்தவரை மரங்களை நட்டு வளர்த்து தமிழ்நாட்டை பசுமைத் தாயகமாக மாற்றுவதற்கு பங்களிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Pasumai Thayakam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->