சேலம் ஆலோசனை கூட்டம்: திடீரென மருத்துவர் இராமதாஸ் பழைய நினைவுகளை பதிவிட்டு அசத்தல்.!  - Seithipunal
Seithipunal


'பழைய நினைவு - பழைய' சோறு என்ற தலைப்பில் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்போது பாமக தொண்டர்களை இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரின் அந்த பதிவில், 

"கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் பாட்டாளி சொந்தங்களை சந்திப்பதற்காக  பயணம் மேற்கொண்டிருக்கிறேன். 

தருமபுரியில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து இன்று சேலத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் குறித்த சிந்தனைகளில் மூழ்கியிருந்தேன்.

அப்போது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்&ஆப்கள் மூலம் தொடர்ந்து பாட்டாளிகள் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். 

அவர்களின் பிறந்தநாளையொட்டியும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாளையொட்டியும் மரம் நட்டது குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தான் அவை. அந்த செய்திகளையும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க வரும் பாட்டாளிகள் காட்டும் அன்பையும் நினைத்துப் பார்த்த போது தான் பாட்டாளி மக்கள் கட்சி என்பது கட்சி அல்ல குடும்பம் என்பது எவ்வளவு உண்மை? என்று தோன்றியது. 

அப்போது வன்னியர் சங்க காலத்தில் பாட்டாளி ஒருவரின் குடிசைக்கு சென்று பழைய சோறு சாப்பிட்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது.

ஒருமுறை சங்க வேலையாக ஈரோட்டுக்கு சென்றிருந்தேன். நானும் நிர்வாகிகளும் உணவருந்த வேண்டும். எந்த உணவகத்தில் சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த பகுதியில் நமது சங்கத்திற்காக கடுமையாக உழைக்கும் ஏழைத் தொண்டன் யார்? அவரது வீடு எங்கு உள்ளது? என்று வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டேன்.

அவர்கள் ஒருவரின் பெயரைக் கூறினார்கள். அவர் வீட்டிற்கு சென்று அவர் கொடுக்கும் உணவை சாப்பிடலாம் என்று கூறினேன். அதன்படியே அந்த ஏழைத் தொண்டரின் குடிசை வீட்டிற்கு சென்றோம். அந்தத் தொண்டரின் வீட்டுக்கு செல்லவே சிரமப்பட்டோம். 

அது மிகவும் தாழ்வான குடிசை வீடு. வீட்டிற்குள் குனிந்து கூட செல்ல முடியாது. குனிந்து உடலைக் குறுக்கி, உட்கார்ந்த நிலையில் தான்  உள்ளே சென்றோம். ஆனால், அந்த தொண்டன் எங்கள் மீது காட்டிய அன்பு மிகவும் உயர்ந்தது.

நாங்கள் சென்ற நேரத்தில் அவர் வீட்டில் இருந்தது பழைய சோறு தான். அதை அவரும், அவரது குடும்பத்தினரும் அன்பு கலந்து பரிமாறினார்கள். அந்த பழைய சோறு அவ்வளவு சுவையாக இருந்தது. அவர் படைத்த உணவால் வயிறு நிறைந்தது. அவர் காட்டிய அன்பால் மனம் நிறைந்தது. 

பின்னர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு சங்கப் பணிகளை மேற்கொள்ளச் சென்றோம். இது போன்று ஏழைத் தொண்டர்களின் வீடுகளில் உணவருந்திய அனுபவம் எனக்கு ஏராளமாக உண்டு.

இதையெல்லாம் நான் இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம் மலரும் நினைவுகள் மட்டுமல்ல. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் மக்களுடன் மக்களாக கலந்து பழக வேண்டும் என்பதற்காகத் தான்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Pazhaiya Soru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->